துணைப்பாட வகுப்புகளுக்கான விளம்பரங்களைக் கண்காணிக்கும் கல்வி அமைச்சு

1 mins read
182f7777-c90b-4baa-91ee-69e2b3fa472a
மாணவர்களையும் பெற்றோரையும் ஈர்க்க, துணைப்பாட வகுப்புகள் தங்களது விளம்பர நடவடிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாணவர்களையும் பெற்றோரையும் ஈர்க்க, துணைப்பாட வகுப்பு நடத்தும் நிறுவனங்கள் தங்களது விளம்பர நடவடிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சில துணைப்பாட நிறுவனங்கள் பெற்றோருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதமாக விளம்பரம் செய்கின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற விளம்பர நடவடிக்கைகளை எப்படி தடுப்பது என்பது குறித்து தற்போது கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சின் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) தெரிவித்தார்.

துணைப்பாட வகுப்புகளின் விளம்பரங்கள் குறித்து புக்கிட் பாஞ்சாங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

“இவ்வாண்டு பள்ளிகள் தொடங்கிய முதல் நாளன்று துணைப்பாட நிறுவன ஊழியர்கள் பள்ளிகளுக்கு வெளியே நின்றுகொண்டு தங்களது விளம்பரப் பிரசுரங்களைப் பெற்றோர்களிடம் தருகின்றனர்.

“பள்ளித் தொடங்கிய முதல் நாளே துணைப்பாட நிறுவனங்கள் இவ்வாறு செய்வது பெற்றோர் மத்தியில் தங்களது பிள்ளைகளின் படிப்பு குறித்து ஒருவித தயக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,” என்று திரு லியாங் கேட்டுக்கொண்டார்.

“கல்வி அமைச்சு இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காது. பெற்றோரை இப்படி துணைப்பாட நிறுவனங்கள் அணுகுவது தவறானது. பள்ளிகள் இந்த நடவடிக்கைக்கு எதிரானவை. துணைப்பாட நிறுவனங்களின் இந்த நடவடிக்கையைத் தடுப்பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது,” என்று திருவாட்டி கான் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்