சுய தீவிரவாதப் போக்கைத் தடுக்க கல்வி அமைச்சின் முயற்சிகள்

சுய தீவிரவாதப் போக்கைத் தடுக்க கல்வி அமைச்சின் முயற்சிகள்

2 mins read
fe57fa8b-8ce3-471a-a917-557e1663e3e9
சுய தீவிரவாதப் போக்கைத் தடுக்க கல்வி அமைச்சின் முயற்சிகளுடன் சமூகத்தினரின் முயற்சிகளும் அவசியமென கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் (வலது) மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகமும் (இடது) கூறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இளையர்களின் சுய தீவிரவாதப் போக்கைத் தடுக்க பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் மேம்பட்ட முயற்சிகள் எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, திங்கட்கிழமை (ஜூலை 27) உறுதியளித்தார்.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கற்றல் சாதனங்களில் மேலாண்மைச் செயலி ஒன்று பொறுத்தப்பட்டிருப்பதாகவும், அதன்வழி தீங்கிழைக்கும் இணையப் பதிவுகளும் பக்கங்களும் மாணவர்களுக்கு எட்டாவண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்தது.

சமூக கல்வி, நற்பண்பு, குடியியல், வரலாறு ஆகிய பாடங்களில் பயங்கரவாதக் கொள்கைகளின் பாதிப்பும் அதை எவ்வாறு கையாளலாம் என்பதும் கற்பிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

சிறந்த இணையப் பயனாளர்களாக விளங்க தீங்கிழைக்கும் இணையப்பக்கங்களைத் தவிர்க்கும் முறைகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது.

பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் ஆலோசகர்களுக்கும் இணைய சுய தீவிரவாதப் போக்கிற்கு ஆளாகும் அபாயமுள்ள மாணவர்களைக் கண்டறிய சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது.

கல்வி அமைச்சு 2007ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பயங்கரவாதம், சுய தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான பயிலரங்குகளையும் நடவடிக்கைகளையும் பள்ளித் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

“சுய தீவிரவாதப் போக்கு என்பது வயது, பின்னணி ஆகியவற்றுக்கு உட்பட்டதல்ல. இணைய சுய தீவிரவாதப் போக்கால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது,” என்று திரு லீ கூறினார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, பாதிக்கப்பட்ட இளையர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்துகையில் கல்வி அமைச்சு அவர்களின் கல்விப் பயணம் தொடர்வதையும் அவர்கள் அர்த்தமுள்ள வழியில் முன்னேறுவதையும் உறுதிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சவாலைச் சமாளிக்க கல்வி, தடுப்பு, அவசரகாலத் தீர்வுகள் ஆகிய மும்முனை உத்தி பயன்படுத்தப்படுகிறதென அவர் கூறினார்.

பெற்றோர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரும் விழிப்புணர்வுடன் தம்மைச் சுற்றியுள்ள இளையர்கள் சுய தீவிரவாதப் போக்கில் ஈடுபடும் சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் குரல் எழுப்புமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்