செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உட்பட, கல்வித் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான குறுகிய கால ஆய்வுகளுக்கு ஆதரவளிப்பதற்காக, 2026ஆம் ஆண்டில் கல்வி அமைச்சால் ஒரு புதிய நிதி தொடங்கப்பட்டுள்ளது.
‘விரைவு ஆராய்ச்சி நிதி’ (Rapid Research Fund) என்று அழைக்கப்படும் இது, அமைச்சால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட கவனம் செலுத்தும் பகுதிகளைக் கொண்ட ஆய்வுகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்த ஆய்வுகள் பொதுவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும்.
ஆராய்ச்சிக் கேள்விகள் கல்வி அமைச்சின் பிரிவுகளால் முன்மொழியப்படுகின்றன. மேலும் ஒவ்வோர் ஆய்வும் கல்வி அமைச்சின் ஒரு நிபுணரால் வழிநடத்தப்படுகிறது என்று அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது. 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் நடத்தப்பட்ட முதல் ஆறு ஆய்வுகளின் முடிவுகள், ஜூலை மாதத்திற்குப் பிறகு வெளியிடப்படும்.
ஆசிரியர்கள் கற்றல் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த ஒரு கள ஆய்வு, ஆசிரியர்களும் மாணவர்களும் கற்பித்தல் மற்றும் கற்றலுக்காக செயற்கை நுண்ணறிவு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த ஒரு கணக்கெடுப்பு ஆகியவை இதில் அடங்கும்.
விளையாட்டு வடிவமைப்பின் கூறுகளைப் பயன்படுத்தி, விளையாட்டுமயமாக்கலை கற்றல் உள்ளடக்கத்துடன் இணைப்பது மாணவர்களின் ஊக்கம் மற்றும் கற்றல் விளைவுகளில் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற பிற தலைப்புகளும் இதில் அடங்கும்.
கல்வி அமைச்சரும், சமூக சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2), “செயற்கை நுண்ணறிவு நிறைந்த உலகம் போன்ற வேகமாக மாறிவரும் சூழலில் விரைவாகப் பதிலளிக்கக்கூடிய ஆராய்ச்சிகளுக்கும் பல ஆண்டு கால ஆய்வுகளுக்கும் ஆதரவளிப்பதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
சிங்கப்பூர் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,000க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ஆராய்ச்சி முடிவுகள், கருத்துகள் மற்றும் கற்பித்தல் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் 11வது ‘கற்பித்தலை மறுவடிவமைத்தல்’ அனைத்துலக மாநாட்டின் தொடக்க விழாவில் ஜூன் 2ஆம் தேதி அவர் உரையாற்றினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசியக் கல்விக் கழகத்தில் நடத்தப்படும் இந்த மாநாடு, ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கு இந்தப் புதிய நிதி பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த நிதியைப் பயன்படுத்தும் ஏழு ஆய்வுகளின் இரண்டாவது சுழற்சி, மார்ச் முதல் டிசம்பர் 2026 வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

