மனநலம், இளையர் எதிர்கொள்ளும் தொழில்நுட்பத் தாக்கம் ஆகியவற்றின்மீது தமது அமைச்சு கவனம் செலுத்த இருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
மனநலப் பாதிப்புகள் உலகளாவிய பரவலாகத் தொடரும் வேளையில் அவற்றைத் தடுக்கும் நோக்கில் வளங்களைச் சீரமைக்க வேண்டி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வளர்ந்து வரும் இளம்பருவத்தினர் மீதான தொழில்நுட்பத் தாக்கத்தைக் கையாள்வதும் சுகாதார அமைச்சின் மனநல முன்னுரிமைகளில் முக்கியமானது என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) நடைபெற்ற ‘ஒர்க்வெல் லீடர்ஸ்’ விருது நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திரு ஓங், மனநலப் பிரச்சினைகளைத் தடுக்க, அதிகமான வளங்களை ஒதுக்குவதற்கான முயற்சிகளில் அமைச்சு ஈடுபட்டு வருகிறது என்றார்.
“சிங்கப்பூர் நான்கு அடுக்கு மனநலக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
“தடுப்புமுறையும் ஆரம்பகாலத் தலையீடும் அடுக்கு 1 மற்றும் 2 ஆக உள்ளன. அந்த ஈரடுக்குகளில்தான் பெரும்பாலான மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
“தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான வளங்கள் அடுக்கு 4ல் குவிந்துள்ளன. 2,000 படுக்கைகளைக் கொண்ட மனநலக் கழகம் (IMH) போன்ற அமைப்புகளில் வழங்கப்படும் தீவிர உள்நோயாளிச் சேவைகளுக்காக அத்தகைய வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
“இன்றைய சூழலில் தடுப்பு நடவடிக்கைகளே முதன்மைத் தேவையாக உள்ளதால், அடுக்கு 1, அடுக்கு 2 ஆகியன அதிக ஆதரவைப் பெறும் வகையில் வளங்களைச் சீரமைப்பது அமைச்சின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக உள்ளது,” என்று திரு ஓங் தமது உரையில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்களின் மனநலம், மீள்திறனை ஆதரிப்பதில் முதலாளிகளும் நிறுவனங்களும் ஒரு முக்கியப் பங்கை ஆற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். “சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மனநலக் குறைபாட்டின் பரவல் அதிகரித்து வருகிறது. “வணிக, தொழிலாளர் சந்தைப் போட்டித்திறன் மற்றும் வேலை நேரம் ஆகிய இரண்டிலும் சிங்கப்பூர் தொடர்ந்து உயர் தரவரிசையில் இருப்பதாக ‘உலகப் போட்டித்திறன் ஆண்டறிக்கை’ போன்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “வேலை நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. வேலையில் ஏற்படும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதும் முக்கியமானது. “எனவே, இந்த உலகளாவிய சவால்களை முதலாளிகளும் நிறுவனங்களும் சரிவர நிர்வகிக்க இயலும்,” என்று கூறினார் திரு ஓங். பணியிடத்தில் மனநலச் சவால்களைக் கண்டறிவது குறித்து மேற்பார்வையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனங்களில் மனநலம் குறித்த களங்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

