சிங்கப்பூரர்களுக்கு ஆர்வமில்லாத வேலைகளில் வெளிநாட்டவர்களை அமர்த்த உள்துறை அமைச்சு அனுமதி

2 mins read
68eda1a6-c035-41c4-b97f-9c7ae3637ca6
சிங்கப்பூரர்களுக்கு ஆர்வமில்லாத குறிப்பிட்ட பணிகளை வெளிநாட்டவர்ளைக் கொண்டு நிரப்ப உள்துறைக் குழு திட்டமிட்டுள்ளது. - கோப்புப் படம்: லியான்ஹ சாவ்பாவ்

இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை துணைக் காவல் படை அதிகாரிகளாக வேலைக்கு அமர்த்த உள்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

சிறைக்கைதிகளின் சுகாதாரத்தைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் ஒரு பக்கம் குறைந்து வருகிறது. மறுபக்கம் அதிகமானோர் மூப்படைந்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைகளைச் சமாளித்து பணிகளை உருமாற்ற உள்துறை அமைச்சின் உள்துறைக் குழு, தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தி வருகிறது.

மேலும், சிங்கப்பூரர்களுக்கு விருப்பமில்லாத குறிப்பிட்ட வேலைகள், அதிக வெளிநாட்டவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சுக்கான செலவின ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய அவர், ஒவ்வொரு விவகாரங்களிலும் உள்துறைக் குழு புதுப்புது, வளர்ந்து வரும் சவால்களை எதிர்நோக்குகிறது என்றார்.

இத்தகைய மிரட்டல்கள் நாளுக்கு நாள் சிக்கலாகி வருவதாகவும் அவர் சொன்னார்.

“மனிதவளம் வரம்புக்கு உட்பட்டு உள்ளது. பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. திறனாளர்களுக்கான போட்டித் திறன் கூடியுள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

திருமதி டியோ, தனது உரையில் உள்துறைக் குழுப் பயன்படுத்தும் சில புதிய தொழில்நுட்பங்களையும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளையும் பகிர்ந்துகொண்டார்.

வர்த்தக, தொழிற்பேட்டைகளில் தீப்பாதுகாப்பு விதிமீறல்களை கண்காணிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு கருவியால் உருவாக்கப்பட்ட சோதனை முறையை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பயன்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த கருவி, கடந்த கால அறிக்கைகளையும் பல்வேறு தகவல்களின் தரவுகளையும் உள்ளடக்கி செயல்படுகிறது.

இது, துல்லியமான இலக்குகளில் சோதனைகளை மேற்கொள்ள வழி வகுக்கிறது என்றார் திருமதி டியோ.

வரப்போகும் மாதங்களில் முன்களத்தில் இந்தக் கருவியைப் படிப்படியாகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிறையில் சிறைக் கைதிகளின் அடிப்படைச் செயல்பாடுகளுக்கான அளவீடுகளை (சுவாசம், ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, உடல் வெப்பநிலை போன்றவை) தொலை தூரத்திலிருந்து கண்காணிக்கும் முறையும் சோதிக்கப்பட்டு வருகிறது.

சிறையில் உள்ள வயது முதிர்ந்த சிறைக்கைதிகளுக்கு இது மிகவும் முக்கியம் என்று திருமதி டியோ கூறினார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு வழிகளை உள்துறைக் குழு ஆராய்ந்து வருகிறது.

குற்றவாளிகள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

போலி உருவங்களையும் காணொளிகளையும் உருவாக்க ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை குற்றவாளிகள் பயன்படுத்துவது ஓர் எடுத்துக் காட்டாகும்.

குறிப்புச் சொற்கள்