சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவரின் கட்டணத்திற்கு அப்பால் மற்றச் சிலவகைக் கட்டணங்களுக்கும் உச்சவரம்பை விதிக்கத் திட்டமிடுகிறது.
சிஎன்ஏ ஊடகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்ட டீப் டைவ் (Deep Dive) வலையொளியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அவ்வாறு கூறியிருந்தார். சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதைத் தடுப்பது உச்சவரம்பை விதிப்பதற்கான நோக்கம். அத்துடன் மருத்துவக் கட்டண வழிகாட்டியாகவும் அது திகழும்.
அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு விதிக்கப்பட்ட உச்சவரம்பு, இதுவரை நல்ல பலன்களைத் தந்திருப்பதாகத் திரு ஓங் தெரிவித்தார். பெரும்பாலான கட்டணங்கள் வரம்புக்குள் வந்துவிடுவதாக அவர் சொன்னார்.
மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்தக் கொடுக்கப்படும் மருத்துவ உடைகள் உட்பட வேறு சில அம்சங்களுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உச்சவரம்பை அறிமுகப்படுத்துவதில் உள்ள சிரமங்களையும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார். அதனை நிர்ணயிப்பதில் மிதமிஞ்சிய வேலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு முறையும் உச்சவரம்புகளை நிர்ணயிக்கும்போது அதிக ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. கூடுதலான தரவுகளைத் திரட்டவேண்டியிருக்கிறது. தகவல்களைத் தெரியப்படுத்துவதிலும் ஏராளமான வேலை உள்ளது,” என்றார் அவர்.
அதற்கு ஈராண்டாகலாம் என்று அமைச்சர் ஓங் கூறினார். ஆயினும் அதனைச் செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுகாதார அமைச்சு 2,800க்கும் மேற்பட்ட மருத்துவர்-கட்டண வரம்புகளை உருவாக்கியுள்ளது. மருத்துவச் சேவை வழங்குவோரும் காப்புறுதி நிறுவனங்களும் கட்டணங்களை நிர்ணயிக்க அவை உதவியாக இருக்கின்றன. அத்துடன் ஒருவர் செலவிட்ட கட்டணங்களுக்கு எவ்வளவு தொகையைத் திருப்பிக் கொடுப்பது என்பதை மறுஆய்வு செய்யவும் உச்சவரம்புகள் கைகொடுக்கின்றன.
அந்த வரம்புகளுக்குள் வரும் மருத்துவர்-கட்டணங்களின் விகிதம் 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காட்டுக்குக் கூடியிருப்பதாகத் திரு ஓங் ஜூலையில் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தனியார் மருத்துவர்களின் கட்டண உயர்வு 2010லிருந்து 2018வரை 3 விழுக்காடாக இருந்தது. 2019லிருந்து 2023வரையிலான காலத்தில் அது 0.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
மருத்துவக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த உச்சவரம்பை நிர்ணயிப்பது மட்டும் போதாது என்றார் திரு ஓங்.
கட்டணத்தை ஓரிடத்தில் கட்டுப்படுத்தினால், இன்னோர் இடத்தில் கூடும். பின்பு அதற்குக் கட்டுப்பாட்டை விதித்தால் வேறோர் இடத்தில் அது உயரும். எனவே அந்த மாற்றத்தைச் சரிசெய்யவேண்டும் என்றார் அமைச்சர் ஓங்.