புகைமூட்டம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக மருந்தகங்களுக்கும் அவசரநிலைப் பிரிவுகளுக்கும் செல்வோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக உள்ளது. புகைமூட்டமான சூழல் நாட்பட்ட நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் மக்கள் உட்புறங்களில் ஒன்றுகூடுவதால் தொற்றுநோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் இங்குள்ள மருத்துவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து அளித்த பதிலில், சுகாதார அமைச்சு அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டது. எனினும் அது தொடர்பான புள்ளிவிவரங்களை அமைச்சு குறிப்பிடவில்லை.
“புகைமூட்டம் காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சம்பவமோ உயிரிழப்போ பதிவாகவில்லை,” என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
புகைமூட்ட நுண்துகள்களின் அளவில் ஏற்படும் சிறிய உயர்வு, அவசரநிலைப் பிரிவுகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையுடன் தொடர்புடையது எனக் காட்டும் உள்ளூர் ஆய்வு அண்மையில் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளுக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் புகைமூட்டம் காரணமாக இருந்ததா என்பது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குச் சுகாதார அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.
தனியார் மருத்துவர்களும் தொலைதூர மருத்துவச் சேவை வழங்குநர்களும் புகைமூட்டத்துடன் தொடர்புடைய அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை, 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாகக் கூறினர்.
சளி, தொண்டைப் புண், தும்மல், கண் எரிச்சல், ஆஸ்துமா, தோல் தடிப்பு, மூச்சுப் பிரச்சினைகள் முதலியவை அவற்றுள் அடங்கும்.
சிங்கப்பூரில் காற்றின் தரம் இம்மாதம் 5ஆம் தேதியிலிருந்து ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. இங்கு இவ்வளவு நீண்ட காலத்துக்கு அத்தகைய நிலை இதற்கு முன்னர் நிலவியதில்லை. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101ஐ தொட்டால் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.
ஆஸ்துமா, நுரையீரல் நோய் போன்ற ஏற்கனவே உள்ள நாள்பட்ட சுவாசப் பிரச்சினைகள் கொண்ட நோயாளிகளுக்கு, இருமல் அதிகரிப்பு, மூச்சு இரைச்சல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் மோசமடையக்கூடும்.
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் குறியீடு, 110 முதல் 159 வரை பதிவாகியிருந்தது.
