சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு வரும் அக்டோபர் 1ஆம் தேதிமுதல் ‘எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சு’ எனப் பெயர் மாற்றம் காணவிருக்கிறது.
நாட்டின் பொருளியல் போட்டித்தன்மை, தொழில்துறை உருமாற்றம், நீண்டகால மீட்சித்திறன் ஆகியவற்றுக்கு எரிசக்தித் துறை மிக முக்கியமானது என்பதால் இந்த மாற்றம் செய்யப்படுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் எரிசக்தித் தேவைகளை நிறைவுசெய்யும் அதே வேளையில், 2050ஆம் ஆண்டுக்குள் நிகர அளவில் கரியமில வாயு வெளியீடற்ற நிலை எனும் இலக்கை எட்டுவது நாட்டின் முக்கியமான தேசியச் சவால் என்று புதன்கிழமை (ஜூலை 22) செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறினார்.
தூய்மையான எரிசக்தியைப் பெறுவது பெருஞ்சவாலாக இருக்கும் என்றும் அணுவாற்றல் பயன்பாடு குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக, தொழில் அமைச்சின் பணிகள் விரிவடைந்து வருவதால், எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சை இரண்டு அமைச்சர்கள் இணைந்து வழிநடத்துவர் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
அவ்வகையில், திரு டான் சீ லெங் மனிதவள அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, எரிசக்தி மற்றும் தொழில்துறை விவகாரங்களை முழுமையாகக் கவனிப்பார்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங், நாட்டின் வணிகத்தையும் பரந்த பொருளியல் உத்திகளையும் தொடர்ந்து மேற்பார்வையிடுவார்.
எரிசக்தி, வர்த்தக, தொழில் அமைச்சு என அமைச்சின் பெயரே எரிசக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதால், இரண்டாம் அமைச்சரைக் காட்டிலும் அத்துறையை அமைச்சர் ஒருவர் வழிநடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
இப்போதைய புவிசார் அரசியல் சூழலில் எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சுக்கு இரு அமைச்சர்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராக இருந்து, அத்துறைகளில் திரு டான் அணுக்கமாகப் பணியாற்றி வருவதையும் திரு வோங் சுட்டினார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வர்த்தகத் தொடர்பு விவகாரங்களைத் தொடர்ந்து கவனிப்பார்.
இதனிடையே, நீரைப் போலவே சிங்கப்பூருக்கு எரிசக்தியும் வாழ்வாதார வளமாகும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப, சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துவது, குறைந்த கரியமில வாயு வெளியேற்றத் தொழில்நுட்பங்களை ஆராய்வது போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அமைச்சு ஏற்கெனவே மேற்கொண்டு வருகிறது.
உலகளவில் எரிபொருள் விநியோகச் சவால்கள் நிலவும் வேளையில், நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பாதுகாப்பான, கட்டுப்படியாகக்கூடிய, நீடித்து நிலைக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்க எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சு பாடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

