புலப்படாத உடற்குறை உள்ளோருக்கு சட்ட ஆதரவு வழங்க புதிய பணிக்குழு

புலப்படாத உடற்குறை உள்ளோருக்கு சட்ட ஆதரவு வழங்க புதிய பணிக்குழு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Mar 2025 - 6:22 pm

2 mins read

கண்ணுக்குப் புலப்படாத உடற்குறை உள்ளோருக்கு நீதிவழங்க பணிக்குழு ஒன்றை ஏற்படுத்த சட்ட அமைச்சு கடப்பாடு கொண்டு உள்ளதாக சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்து உள்ளார்.

அதுபோன்ற உடற்குறை உள்ளோர் எதிர்கொள்ளும் சட்டச் சவால்கள் தொடர்பாக சிங்கப்பூரில் முதன்முறையாக கருத்தரங்கு ஒன்று புதன்கிழமை (மார்ச் 26) நடத்தப்பட்டது.

சிறப்புத் தேவை உள்ள இரு தனிப்பட்டவர்கள் சந்தித்த சவால்கள் அந்தக் கருத்தரங்கில் மேற்கோள் காட்டப்பட்டன.

அறிவுத்திறன் மந்தமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோதிலும் நீதிமன்றத்தில் அதனை நிரூபிப்பதற்கான அந்தப் பெண்ணின் திறன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் தொடுக்கப்படவில்லை.

அதேபோல, ஆட்டிசம் என்னும் மனஇறுக்கக் குறைபாடு உள்ள ஒரு சிறுமியின் மிதமிஞ்சிய செயல்பாடுகள் காரணமாக சிறுமியர் இல்லத்தில் வைக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயலும் அளவுக்குக் கொடுமை நடந்தது.

இலவசச் சட்ட அமைப்பு சிங்கப்பூர், அரசு நீதிமன்றங்கள் இரண்டும் இணைந்து நடத்திய ‘நீதியை அணுகுவது (A2J)‘ என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் இந்த இரு சம்பவங்கள் பற்றியும் பேசப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான வழக்கறிஞர் திருவாட்டி பெக்கி யீ, கண்ணுக்குப் புலப்படாத உடற்குறை பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் விளக்கினார்.

உளவியல் குறைபாடுகள், மனச்சிதைவு போன்றவையும் அந்த உடற்குறையில் அடங்கும் என்றார் அவர்.

தமக்கு மனநலக் குறைபாடுகள் அல்லது மனஇறுக்கம் உள்ளது என்று எவரும் அறிகுறிகளைக் காட்டுவது இல்லை என்றும் அவர் சொன்னார்.

கருத்தரங்கில் உரையாற்றிய சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங், பல அமைப்புகளை உள்ளடக்கிய பணிக்குழு ஒன்றை ஏற்படுத்த தமது அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார்.

அமைச்சுகள், சமூக ஆதரவு அமைப்புகள் போன்றவை அந்தக் குழுவில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்ணுக்குப் புலப்படாத உடற்குறை உள்ளோரையும் நீதிமுறைக்குள் கொண்டுவந்து அவர்களை ஆதரிக்க அவ்வாறு செய்யப்படும் என்று கூறினார் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சருமான திரு டோங்.

குறிப்புச் சொற்கள்