பொங்கோல் வட்டாரத்தில் நான்கு சிறுவர்கள் சாலையில் இருவிதமான குறும்புச் செயலில் ஈடுபட்டு பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நான்கு சிறுவர்களுக்கும் 13 வயது என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் இதுகுறித்து திங்கட்கிழமை (பிப்ரவரி 23) அறிக்கை வெளியிட்டனர்.
முதல் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி பின்னிரவு 12.15 மணிக்கு பொங்கோல் வாட்டர்வே பாயிண்ட் அருகில் உள்ள பூங்கா சாலையில் நடந்தது.
சிறுவர்கள் சாலையில் நடந்து சென்ற மக்கள்மீது பிளாஸ்டிக் பையில் நீரை அடைத்து வீசியதாகவும், தண்ணீர் போத்தல்களை வீசியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இரண்டாவது சம்பவம், டிசம்பர் 22ஆம் தேதி நடந்தது. பொங்கோல் டிரைவ் சாலையில் உள்ள மூன்று தடங்களிலும் போக்குவரத்து முக்கோணங்களை வைத்து வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிறுவர்கள் நடந்துகொண்டனர்.
இந்தச் சம்பவங்களை அங் மோ கியோ காவல்துறைப் பிரிவு விசாரித்தது. விசாரணையில் நான்கு சிறுவர்களும் சிக்கினர்.
இதுபோன்ற குறும்புச் செயல்களுக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் குற்றம் செய்தது சிறுவர்கள் என்பதால், அவர்களுக்குச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படும்.

