காணாமல் போன ஆடவர் இரண்டு நாள் கழித்து மரணமடைந்தார்

காணாமல் போன ஆடவர் இரண்டு நாள் கழித்து மரணமடைந்தார்

படம்: சிங்கப்பூர் காவல்துறை

27 Apr 2026 - 8:18 pm

1 mins read

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காவல்துறையால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 70 வயது ஆடவர், இரண்டு நாள்கள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) மரினா கோஸ்ட் டிரைவ்வில் அசைவின்றி கிடந்தார்.

திரு ஃபூ கீ குவான் என்ற அந்த ஆடவர் மரணமடைந்துவிட்டதாகப் பிறகு உறுதிசெய்யப்பட்டது.

திரு ஃபூ கடைசியாக ஏப்ரல் 24ஆம் தேதி புளோக் 51 நியூ அப்பர் சாங்கி ரோட்டில் அதிகாலை 3.20 மணிக்குக் காணப்பட்டதாகக் காவல்துறை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அப்போது அவர் கருப்பு நிற டி-சட்டையும் அதே நிற கால் சட்டையும் அணிந்திருந்தார்.

சமூகத் தொண்டு நிறுவனமான சிங்கப்பூர் நினைவிழப்பு நோய் அமைப்பு, சனிக்கிழமை (ஏப்ரல் 25) அதன் ஃபேஸ்புக் பதிவில், திரு ஃபூ காணாமல் போனது குறித்து பொதுமக்களுக்கு செய்தி வெளியிட்டது.

மரினா ஈஸ்ட் டிரைவ்வில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.35 மணிக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.

ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச் செயல் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை எனவும் காவல்துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்