சிங்கப்பூரில் காணாமல்போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆனால் அவரது மரணத்தில் சூழ்ச்சி நடந்ததற்கான சந்தேகம் இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
இம்மாதம் 23ஆம் தேதி அந்த 50 வயது ஆடவர் காணாமல்போனார். மறுநாள் கோனி தீவு கடற்பகுதியில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாலை 5.20 மணியளவில் பொங்கோலில் உள்ள எட்ஜ்பீல்ட் பிளைன்ஸ் புளோக் 178 அருகே டோனி ஹொவ் வென் லி என்பவர் கடைசியாகக் காணப்பட்டதாகவும் அவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உதவலாம் என்று அன்றிரவு வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை கேட்டுக் கொண்டது.
காணாமல்போன சமயத்தில் அவர் கறுப்பு நிறச் சட்டையும் கால்சட்டையும் அணிந்திருந்தார். அவர், கறுப்பு நிற முதுகுப்பை ஒன்றையும் வைத்திருந்தார். இந்த நிலையில் ஜூன் 24ஆம் தேதி காலை சுமார் 8.50 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து காவல்துறை கோனி தீவுக்கு விரைந்தது. அதனைத் தொடர்ந்து, அங்குள்ள கடற்பகுதியில் இருந்து 50 வயது ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் அதிகாரபூர்வமாக உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் துன்புறுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சி செய்து அவர் கொல்லப்பட்டதாகவோ சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை சொன்னது. இது குறித்து விசாரணையை அது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

