அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் பெயர், அமெரிக்காவின் மேசசூசட்ஸ் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) பல்கலைக்கழகம் வழங்கும் கல்விமான் திட்டத்துக்கு சூட்டப்படவுள்ளது.
மேலும், எம்ஐடி அவருக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளது.
எம்ஐடியின் கொலுப் நிதி, கொள்கை நிலையம், அவருக்கு இவ்விருதை வழங்கவுள்ளது. அனைத்துலக நிதிக் கொள்கைகளை வழிநடத்தும் வகையில் திரு தர்மன் ஆற்றிய பெரும்பங்குக்காக அவர் அங்கீகரிக்கப்படுகிறார்.
திரு தர்மனுக்கு கொலுப் நிலையம், மிரியம் போஸன் விருதை (Miriam Pozen Prize) வழங்கவுள்ளது என்று எம்ஐடி தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) தெரிவித்தது. அவர், ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இவ்விருதைப் பெறும் மூன்றாவது நபராவார்.
விருது நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி எம்ஐடியின் ஸ்லொவன் நிர்வாகப் பள்ளியில் நடைபெறவுள்ளது. அதில் திரு தர்மனுக்கு 200,000 வெள்ளிப் பரிசுத் தொகை வழங்கப்படும்.
அதோடு, அவரின் பெயர் சூட்டப்பட்ட கல்விமான் திட்டம், ஸ்லோவன் வர்த்தக நிர்வாக முதுநிலைப் பட்டக் கல்வி மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும். அந்த மாணவர் வரும் 2026ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்படுவார்.
நிதிக் கொள்கைகளைப் பொறுத்தவரை திரு தர்மன் பற்பல ஆண்டுகளாகப் பங்காற்றியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்குமேல் நீடிக்கும் தமது அரசியல் பயணத்தில் திரு தர்மன் கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், சமுதாய, பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், துணைப் பிரதமர், மூத்த அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
2011லிருந்து 2023 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 2001ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த அவர், அதற்கு முன்பு நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு வகித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உலக மேடையில் திரு தர்மன் ஜி-30 எனும் சுயேச்சை அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். ஜி-30, பொருளியல், நிதி சார்ந்த கொள்கைகளை வரையும் முன்னணி வல்லுநர்களைக் கொண்டுள்ள உலக அமைப்பாகும்.
திரு தர்மன், உலக வர்த்தக மாநாட்டின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

