எம்எம்ஆர்டி ரயில் லாபம் 8% சரிவு: சேவைத் தடங்கலால் வருவாய் பாதிப்பு

2 mins read
300448b7-3768-4076-b0bd-eb7b8d159f5d
லாபம் $7.5 மில்லியனில் இருந்து $6.9 மில்லியனுக்குக் குறைந்துவிட்டதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது ரயில் சேவைப் பிரிவில் வருவாயும் லாபமும் சரிந்துவிட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில், வரிக்குப் பிந்திய லாபம் $6.9 மில்லியனாகக் குறைந்துவிட்டது என்றும் அது எட்டு விழுக்காடு சரிவு என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு  $7.5 மில்லியன் லாபம் கிடைத்ததாக அது கூறியுள்ளது. 

ரயில் சேவை மூலமான வருவாய் $886.7 மில்லியனில் இருந்து $918.2 மில்லியனுக்கு உயர்ந்துள்ளதாகவும் அதற்குக் கடந்த ஆண்டு டிசம்பரில் நடப்புக்கு வந்த ஆறு விழுக்காடு கட்டண உயர்வும் தனது நான்கு எம்ஆர்டி வழித்தடங்களிலும் ஒரு எல்ஆர்டி வழித்தடத்திலும் அதிகமானோர் பயணம் செய்ததும் காரணங்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

இருப்பினும் தனது வருவாய் வளர்ச்சி குறைந்துவிட்டதாகவும் அதற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறு நாள்கள் நீடித்த ரயில் சேவை இடையூறு முக்கிய காரணம் என்றும் அது வியாழக்கிழமை (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

கிழக்கு-மேற்கு ரயில் தடத்தில் ஏற்பட்ட சேவைத் தடங்கல் காரணமாக செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆறு ரயில் பயணங்களில் ஒன்று தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஜூரோங் ஈஸ்ட், போன விஸ்தா ஆகிய எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் பயணிகளுக்கு இலவசப் பயணத்தை அந்நிறுவனம் வழங்கியது.

இலவசப் பேருந்து மற்றும் இடைவழிப் பயணச் சேவைகளை வழங்கியதால் ஏற்பட்ட செலவுகளும் 2.55 கிலோமீட்டர் தூர தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்வதற்குச் செலவிடப்பட்ட தொகையும் லாபத்தைப் பாதித்துவிட்டதாக எஸ்எம்ஆர்டி கூறியுள்ளது. 

அவற்றுக்கு மட்டும் $10 மில்லியனுக்கும் மேல் செலவிடப்பட்டதாக அது கூறியது. சேவைத் தடங்கலுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் விதித்த $2.4 மில்லியன் அபராதமும் அதில் அடங்கும் என்றது அந்நிறுவனம்.

எஸ்எம்ஆர்டி நிறுவனம், சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்