தேசிய தின அணிவகுப்பில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய அங்கம் வகித்தது ஒருங்கிணைந்த வாகன அணிவகுப்பு. இதில் 800 பேர் பங்கேற்றனர்.
சிங்கப்பூரில் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு முதன்முதலாக 1969ல் இடம்பெற்றது. ‘நமது பலம், நமது மக்கள், நமது எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நிலம், வானம், நீர்ப்பரப்பில் இந்தச் சிறப்பு அணிவகுப்பு இடம்பெற்றது.
புதிதாகச் சேர்க்கப்பட்ட அம்சங்களில் பார்வையாளர்கள் அருகிலிருந்தபடி அணிவகுப்பைப் பார்க்கும் வாய்ப்பையும் மரினா பே பகுதியிலிருந்து கடற்படைக் காட்சியமைப்பைக் காணும் வாய்ப்பையும் பெற்றனர்.
வழக்கமாக, இந்த அணிவகுப்பு செயின்ட் ஆண்ட்ரூஸ் சாலை வழியாகச் செல்லும்.
இம்முறை பாடாங்கின்மீது வான்வெளிக் காட்சியும் இடம்பெற்றது.
மேலும், மரினா பே பகுதியைச் சுற்றி கடல்சார் காட்சிகள் அரங்கேறின.
பாடாங்கைச் சுற்றி பார்வையாளர்கள் மெய்மறந்து போகும் வண்ணம் பல காட்சிகளை ஆவலுடன் கண்டுகளித்தனர்.
ஒருங்கிணைந்த வாகன அணிவகுப்பு நான்கு அங்கங்களாகப் பிரிக்கப்பட்டது. நாட்டைப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் ஆயுதப் படை அதன் போர்த்திறனை வெளிப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
‘செயலில் நமது பலம்’ எனும் அங்கத்தில் உள்துறைக் குழு, சிங்கப்பூர் ஆயுதப்படையின் செயல்பாடுகள் காண்பிக்கப்பட்டன.
‘நமது சிங்கப்பூரைப் பாதுகாப்பது’ எனும் அங்கத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையும் உள்துறைக் குழுவும் எவ்வாறு கைகோத்து சிங்கப்பூரின் பாதுகாப்புக்குப் பங்களிக்கின்றன என்பது குறித்து காட்சியளிக்கப்பட்டது.
செயின்ட் ஆண்ட்ரூஸ் சாலை வழியாக ராணுவ வாகன அணிவகுப்பு இடம்பெறும் வேளையில், எஃப்-15எஸ்ஜி போர் விமானங்கள், சி-130 போக்குவரத்து விமானங்கள், ‘எச்225எம்’ ஹெலிகாப்டர்கள் பாடாங் முழுவதும் பறப்பதைக் பார்வையாளர்கள் கண்டனர்.
இறுதியாக, ‘தலைமுறை தலைமுறையாக’ எனும் அங்கத்தில், முன்னாள் படைவீரர்களும், தலைமுறைகளைத் தாண்டிய அவர்களின் அனுபவங்களும் காண்பிக்கப்பட்டன.
அந்தச் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற 200 பேர் கடுமையாக உழைத்தனர்.

