2026 ஜனவரி முதல் உயர்நிலைப் பள்ளிகளில் திறன்பேசிகளைப் பயன்படுத்தத் தடை

2026 ஜனவரி முதல் உயர்நிலைப் பள்ளிகளில் திறன்பேசிகளைப் பயன்படுத்தத் தடை

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Nov 2025 - 7:28 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2026 ஜனவரி முதல் திறன்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

‘ஸ்மார்ட்வாட்ச்’ எனப்படும் நவீன கைக்கடிகாரங்களையும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

திறன்பேசிகளையும் ‘ஸ்மார்ட்வாட்ச்’ சாதனத்தையும் இடைவேளை நேரத்திலும் இணைப்பாட நடவடிக்கைகளிலும்கூட அவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

கூடுதல் வகுப்புகள், செறிவூட்டல் மற்றும் திருத்த வகுப்புகளின்போதும் திறன்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. அதாவது, பள்ளி வேளைகளில் அந்தச் சாதனங்களைப் பயன்படுத்த இயலாது.

கைப்பேசித் திரை பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் கடுமையாக்கப்படுவதன் ஒரு பகுதியாக இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரும்.

தற்போது, அவர்கள் இத்தகைய சாதனங்களை வழக்கமான வகுப்பு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடாது எனும் கட்டுப்பாடு நடப்பில் உள்ளது.

இவ்வாண்டு ஜனவரியில் தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க புதிய கட்டுப்பாடுகள் அமைந்துள்ளன.

ஆரோக்கியமான மின்னிலக்க வழக்கங்களை ஏற்படுத்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உதவும் நோக்கத்தில் கல்வி அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அறிவித்த தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியே புதிய கட்டுப்பாடுகள்.

பள்ளிக்கூட நேரங்களில் மாணவர்கள் தங்களது திறன்பேசி உள்ளிட்ட சாதனங்களைத் தங்களது புத்தகப் பையிலோ தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பொருள் பாதுகாப்புச் சிற்றறைகளிலோ வைத்துக்கொள்ளலாம் என அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேவைப்படும் நேரத்தில், விதிவிலக்காக மாணவர்கள் தங்களது திறன்பேசியைப் பயன்படுத்தப் பள்ளிகள் அனுமதிக்கலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

சில உயர்நிலைப் பள்ளிகள் ஏற்கெனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

தொடக்கப் பள்ளிகளில் நடப்பில் உள்ள திறன்பேசிக் கட்டுப்பாடுகள் நல்ல பலன்களைத் தந்ததை அறிந்த பின்னர் அவை அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.

தொடக்கப் பள்ளிகளில் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பின்னர் மாணவர்களின் நல்வாழ்வு மேம்பட்டதோடு, பாடத்தில் கவனம் செலுத்துவதும் அதிகரித்தது. மேலும், இடைவேளை போன்ற நேரங்களில் ஓடுவது, நடப்பது, விளையாடுவது போன்ற அவர்களின் உடலியக்க நடவடிக்கைகள் அதிகமானதும் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்
திறன்பேசிகட்டுப்பாடுஉயர்நிலைப் பள்ளிகல்வி அமைச்சு