புக்கிட் தீமா விரைவுச்சாலையின் (பிகேஇ) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிய ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடமாடும் வேகக் கண்காணிப்புக் கேமரா ஒன்று நிறுவப்பட்டிருப்பதை செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மாலைமுதல் வாகன ஓட்டிகள் கண்டனர்.
அதனையடுத்து, சமூக ஊடகங்கள் மற்றும் உரையாடல் குழுக்களில் உள்ள வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டர்ஃப் கிளப் அவென்யூவிலிருந்து வரும் போக்குவரத்து, பிகேஇயில் இணையும் இடத்திலுள்ள செவ்ரான் குறியீடுகளில் அந்தக் கேமரா அமைந்திருப்பதாக ஏஷியாஒன் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“ஜோகூர் பாருவைச் சேர்ந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் பலரும் அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்ததால் கேமராப் பதிவுகளில் சிக்கியிருப்பார்கள்,” என்று வாகன ஓட்டி ஒருவர் மாலை 5.30 மணியளவில் ஒரு வாட்ஸ்அப் குழுவில் குறிப்பிட்டார்.
மற்றவர்கள் இந்த நடவடிக்கையைப் பாராட்டி, பிகேஇ சாலையின் அந்தப் பகுதியில் அதிவேகமாகச் செல்வது ஒரு பிரச்சினை என்று கூறினர்.
புதன்கிழமை (ஜூன் 17) காலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு, ஏஷியாஒன் தளம், உட்லண்ட்ஸ் அவென்யூ 3, டர்ஃப் கிளப் அவென்யூ மற்றும் பிகேஇயின் ஒரு பகுதி வழியாக 15 நிமிட இடைவெளியில் நான்கு முறை வாகனங்களை ஓட்டிச் சென்று, புதிதாகப் பொருத்தப்பட்ட கேமராவின் தாக்கத்தை சாலைப் போக்குவரத்தில் கண்காணித்தது.
ஏற்கெனவே மணிக்கு 90 கி.மீ. வேக வரம்பில் அல்லது அதற்குக் குறைவாகச் சென்றுகொண்டிருந்தபோதிலும் அந்தச் சாலைப் பகுதியைக் கடக்கும்போது பத்தில் எட்டு வாகனங்கள் வேகத்தைக் குறைத்ததைக் காண முடிந்ததாக ஏஷியா ஒன் செய்தி தெரிவித்தது.
இருப்பினும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட சில மோட்டார்சைக்கிள்கள், அப்பகுதியில் வேக வரம்பைவிட அதிக வேகத்தில் தொடர்ந்து சீறிப் பாய்ந்தன.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை அமைச்சும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து மே 15ஆம் தேதியன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், செலுத்தப்படாத அபராதங்களைக் கொண்ட, வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களும், இவ்வாண்டு நவம்பர் 2ஆம் தேதி முதல் வாகன நுழைவு அனுமதிக்கு (விஇபி) விண்ணப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ இனி அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தன.

