தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்மாதிரியான நகரத்துக்கு மனமும் மக்களும் தேவை: அமைச்சர் மசகோஸ்

3 mins read
afe82485-fea7-47ac-a777-74c43a3569ea
தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் மக்கள் செயல் கட்சி வியாழக்கிழமை (மே 1) நடத்திய பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

ஒரு முன்மாதிரியான நகரத்தை அமைக்க மனமும் மக்களும் தேவை என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.

தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் வியாழக்கிழமை (மே 1) மாலை மக்கள் செயல் கட்சியின் (மசெக) தெம்பனிஸ் தொகுதிப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

பிரசாரக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மசெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் பதாகைகளையும் கட்சியைப் பிரதிபலிக்கும் பலூன்களையும் விளக்குகளையும் பலர் ஏந்தியிருந்தனர்.

அக்குழுதொகுதியில் மசெக வேட்பாளர் அணிக்குத் தலைமையேற்கும் அமைச்சர் மசகோஸ் உரையாற்றினார்.

முதலில் மலாயிலும் பின்னர் ஆங்கிலத்திலும் உரையாற்றிய அவர், பரிவு நிறைந்த, எதிர்காலத்திற்குத் தயாராகியுள்ள சமூகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகத் தெம்பனிஸ் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

தமது இந்தத் தொலைநோக்குப் பார்வையின் மையமாக, புதுப்பிக்கப்படவுள்ள தெம்பனிஸ் வட்டார நகர நிலையம் (Tampines Regional Town Centre) இருக்கிறது என்று திரு மசகோஸ் கூறினார்.

“அது, சமூகத்திற்குப் பல்வேறு சேவைகளை வழங்குவதோடு, மக்களை முதன்மையாகக் கொண்டு அவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஓர் இடமாக இருக்கும்,” என்று அவர் சொன்னார்.

“யார் வேண்டுமானாலும் ஒரு நகரத்தை உருவாக்க முடியும். ஆனால், ஒரு முன்மாதிரியான நகரத்தைக் கட்டமைக்க செங்கற்கள் மட்டும் போதாது,” என்றார் அமைச்சர் மசகோஸ்.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’பின் கட்டுமானத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், “நாங்கள் அதைக் கட்டும்போது நிபுணர்களையும் அரசாங்க நிறுவனங்களையும் மட்டுமே நம்பியிருக்கவில்லை. உங்களைக் கேட்டோம். உங்களுடன் சேர்ந்து உங்களுக்காக அதை வடிவமைத்தோம்,” என்று விளக்கினார்.

முதியோர், குறைந்த வருமானக் குடும்பங்கள், பெற்றோர், உடற்குறையுள்ள குழந்தைகளின் பெற்றோர் முதலியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்த அவர், அவர்களுக்கான உதவித் திட்டங்களையும் தமது உரையில் விளக்கினார்.

தெம்பனிஸ் வட்டாரத்துகான மசெகவின் புதிய ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில், அது குடியிருப்பாளர்கள் அனைவரின் கூட்டு இலக்குகளையும் முயற்சிகளையும் உள்ளடக்கியது என்று திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

தெம்பனிஸ் தொகுதிக்கு எதிர்கட்சியினர் என்ன வழங்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதை வாக்காளர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சியினரில் ஒருவராவது, “மசகோஸின் திட்டத்தை எடுத்து நாங்கள் செயல்படுத்தப்போகிறோம்,” என்று கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த அவர், “மன்னிக்கவும், அது என் திட்டமாகும்!” என்று உரத்த குரலில் முழங்கியபோது, கூட்டத்தினரிடையே பேராரவாரம் எழுந்தது.

“விமானத்தின் பயண இதழைப் படித்துவிட்டால், அதை ஓட்டத் தெரிந்துவிடும் என்று அர்த்தமில்லை,” என்று அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.

தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கான மற்ற நான்கு மசெக வேட்பாளர்களான நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங், மனிதவள மூத்த துணையமைச்சர் டாக்‌டர் கோ போ கூன், திரு டேவிட் நியோ, பேராசிரியர் சார்லின் சென் ஆகியோரும் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினர். புதிய தனித்தொகுதியான தெம்பனிஸ் சங்காட்டின் மசெக வேட்பாளரான டெஸ்மண்ட் சூவும் உரையாற்றினார்.

தமது 14 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இந்தப் பொதுத்தேர்தலே மிகக் கடினமானது என்றார் திரு பே.

“தேர்தலில் வெற்றிபெற்றால் தெம்பனிஸ் நகர மன்றத்தின் தலைவராகப் பதவியேற்று, மக்களுடன் அணுக்கமாக வேலை செய்து, திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன்,” என்று அவர் உறுதியளித்தார்.

குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் அன்றாட முக்கியப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுவேன் என்ற அவர், வட்டாரத்தின் தூய்மை, முதியோருக்கான ஓய்விடங்கள், சரிவுப்பாதைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளார்.

புதுமுகமான திரு டேவிட் நியோ, “இளைய வாக்காளர்கள் நாளைய தலைவர்கள் மட்டுமல்லர்; தீர்மானங்களை எடுக்கும் இன்றைய முக்கிய மனிதர்களும்கூட,” என்றார்.

“நாங்கள் உங்களை நம்புகிறோம். உங்களுக்குச் சேவையாற்றுவோரைத் தெளிவாகத் தேர்வுசெய்வீர்கள் என்பதில் எங்களுக்குத் திடமான நம்பிக்கை உள்ளது,” என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்