சிகிச்சை தொடர்பில் இணைந்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அதற்குரிய ஆதரவையும் நோயாளிகளுக்கு வழங்கும் மருத்துவ நடைமுறையைப் பின்பற்றுகிறார் மகப்பேற்று மருத்துவரான தேவேந்திரா கனகலிங்கம்.
பொதுவாக சில மருத்துவப் பிரச்சினைகளுக்கு நேரடி சிகிச்சை முறை இருந்தாலும், சில சூழ்நிலைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருக்கும். குறிப்பாக, மகப்பேற்று மருத்துவத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமெனச் சொன்னார் அவர்.
“குழந்தைப் பிறப்பு அற்புதங்கள் நிறைந்தது. பெற்றோருக்கும் மருத்துவருக்கும் மனநிறைவைத் தரும் அந்த அனுபவத்தை இயன்ற அளவு மேம்படுத்துவதே என் விருப்பம்,” என்ற மருத்துவர் தேவ், கர்ப்பிணியின் தெரிவுகளுக்கு மதிப்பளித்து, அவரது விருப்பத்திற்கிணங்க முடிவெடுப்பது அதில் முக்கிய வழி என்றும் அவர் சொன்னார்.
மருத்துவர்கள் சொல்வதைத்தான் நோயாளிகள் கேட்க வேண்டும் என்பது ஒருவகை என்றால், நிலைமையை எடுத்துச்சொல்லிப் புரியவைத்து, அடுத்தடுத்த கட்டங்கள், அவற்றின் வழிமுறைகள், ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை விளக்கிக் கூறுவதும் அவர்கள் திறம்பட முடிவெடுக்க உதவும் என நம்புவதாகத் தெரிவித்தார் மருத்துவர் தேவ். இது அவர்களின் ஒத்துழைப்பை அதிகரித்து, அவர்களின் அனுபவங்களைச் சிறந்ததாக்கும் என்றும் அவர் சொன்னார்.
இந்த ஆண்டின் ‘முன்மாதிரித் தொழில்முறை மருத்துவர்’ (Exemplar Professional Clinician) விருதை வென்ற மருத்துவர் தேவ், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மூத்த மருத்துவராக 20 ஆண்டுகளாகச் சிறப்பான மருத்துவச் சேவை வழங்கி வருகிறார்.
“மருத்துவக் கல்வியில் நூல்களுக்கு அப்பால், அனுபவம் மிக்க மருத்துவர்களிடம் பாடம் கற்பது அவசியம். எனக்குக்கீழ் பணியாற்றும் இளம் மருத்துவர்களுக்கு நேரடியாக வழிகாட்டுவதுடன், என் சிகிச்சை முறைகளைக் கவனித்து, அவற்றில் உள்ள சிறப்பம்சங்களையும் அவர்களிடம் உள்ள சிறப்பம்சங்களையும் சேர்த்து தனிப்பட்ட பாணியை உருவாக்க ஊக்குவிக்கிறேன்,” என்றார் இளம் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் மருத்துவர் தேவ்.
“தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி மருத்துவத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. துறையின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்ற மருத்துவர் தேவ், இதற்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் என்றார்.
“உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் ஒன்றிணைந்து அவ்வப்போது புதிய ஆய்வு முடிவுகளை வெளியிடுகின்றனர். அவற்றைப் பெரும்பாலும் இணையத்தில் படிக்க முடிகிறது. புதிதாக வரும் இளம் மருத்துவர், அவர் படித்த ஆய்வு குறித்துப் பகிர்வார். இவ்வாறு, ஒருவருக்கொருவர் பகிர்ந்து பயன்பெறுவது துறையை வலுப்படுத்துகிறது,” என்றும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தன் பங்களிப்பிற்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி என்று கூறும் இவர், தன்னுடன் பணியாற்றும் பிற மருத்துவர்கள், தாதியர், உடலியக்கச் சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதனைச் சமர்ப்பிப்பதாகச் சொன்னார்.
“எல்லாத் துறையிலும் நோயாளிகள் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது காலம் பிடிக்கும். மகப்பேற்று மருத்துவத்தில் மருத்துவருக்கு உடனடியாக வெகுமதி கிடைக்கிறது,” என்று சொன்ன இவர், தன்னிடம் பிரசவம் பார்க்க வரும் தாயையும் சேயையும் நலமாகப் பார்ப்பதே விருது போன்றது என்றும் தெரிவித்தார்.
விருதுகள், இளம் மருத்துவர்களைப் பொதுத் துறையில் ஈடுபடப் பெரிதும் ஊக்குவிக்கும் என்றும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் நேரடியாக நோயாளிகளுடன் பேசி, அவர்களுக்கு நேரடியாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் சொன்னார் மருத்துவர் தேவ்.
சிங்கப்பூர் சுகாதாரத் தரச் சேவை விருதுகள்
சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பங்களித்த வல்லுநர்களையும் பங்காளிகளையும் பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் சிங்கப்பூர் சுகாதாரத் தரச் சேவை விருதுகள் (Singapore Health Quality Service Awards (SHQSA)) வழங்கப்படுகின்றன.
இவ்வாண்டு 45 பொது, தனியார் சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த 4,752 சுகாதாரத்துறை வல்லுநர்கள், பங்காளிகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
பிப்ரவரி 13ஆம் தேதி பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. 16வது முறையாக நடைபெற்ற இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
410 நட்சத்திர விருதுகள், 1,457 தங்க விருதுகள், 2,867 வெள்ளி விருதுகளுடன் ‘சூப்பர் ஸ்டார்’ விருதுகளும், சிறந்த குழுக்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
மருத்துவர், தாதியர், சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள், துணை மருத்துவச் சேவைகள், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் முன்மாதிரி நிபுணராகவும், முன்மாதிரித் தலைவராகவும் திகழும் 14 பேருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
நோயாளிகள் பாதுகாப்பு, அவர்களுக்கு வழங்கப்படும் அனுபவம், அவற்றின் நேர்மறை விளைவுகளில் கவனம் செலுத்தி, மேம்படுத்தும் நான்கு குழுக்களுக்கு, மருத்துவ முறை மேம்பாடு, நோயாளிகளுக்கான அனுபவங்களில் மேம்பாடு ஆகிய பிரிவுகளின்கீழ் சிறந்த குழுக்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

