இந்தியாவில் வணிக வாய்ப்புகளைத் தேடும் சிங்கப்பூர்த் தொழிலதிபர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர்ப் பயணம் பல புதிய கதவுகளைத் திறந்துள்ளது.
தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பகுதி மின்கடத்தி உற்பத்தி வளாகத்தை (Semiconductor High-Tech Park) உருவாக்க 2022ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட ‘ஐஜிஎஸ்எஸ் வெஞ்சர்ஸ்’ (IGSS Ventures) எனும் சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராஜ் குமார், அத்துறையில் இந்தியா காட்டும் நாட்டம் வரவேற்கத்தக்கது என்றார்.
“இந்திய பூர்வீகம் கொண்ட பலரும் இங்கிருப்பதால், நமக்கு இந்திய கலாசாரமும் நன்கு தெரிந்திருப்பது நம் பலமாக அமைகிறது,” என்றார் திரு ராஜ் குமார்.
“தற்போது இந்தியா, ஆசியானைவிட மத்தியக் கிழக்கிலேயே பொருளாதார அளவில் அதிகக் கவனம் செலுத்துகிறது. மேலும், வட்டார முழுமையான பொருளியல் பங்காளித்துவத்தில் (Regional Comprehensive Economic Partnership) இந்தியா கையெழுத்திட்டிருந்தால் சிங்கப்பூருக்கு பல கூடுதல் வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.
“இந்த இரு அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்களும் பிரதமர் மோடியின் வருகையில் இடம்பெற்றிருக்கும்,” என்றார் சிங்கப்பூர்த் தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபைத் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு.
“சிங்கப்பூரின் தொழில்நுட்ப , நிதித் துறை வளர்ச்சி இந்தியாவிற்குப் பெரிய உறுதுணையாக உள்ளது. பிரதமர் மோடியின் வருகை இரு நாட்டவரின் முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது,” என்றார் கார்டினல் ஆலோசகர்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் தலைமை ஆலோசகருமான கே.பரதன்.
“பிரதமர் மோடி கடைசியாக சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து இந்தியாவின் தென்மாநிலங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகள் வலுவடைந்துள்ளன.
“மோடியின் இப்பயணம், வட மாநிலங்களிலும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உள்ள முதலீட்டு வாய்ப்புகள் பற்றித் தெரியப்படுத்தியுள்ளது,” என்றார் கார்டினல் ஆலோசகர்கள் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியும் உத்திபூர்வ தலைவருமான விக்னேஸ்வரன் பிள்ளை.
தொடர்புடைய செய்திகள்
“இந்திய சந்தையை வெற்றிகரமாகக் கையாள, வணிகம் தொடர்பான நிர்வாகம் முதலியவை மாநில, நகரமன்ற அளவில் நடைபெறுவதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
“தொழில்நுட்பம், கழிவு நிர்வாகம், போன்ற துறைகளையும் தாண்டி, இந்தியாவின் விவசாயம், உணவுத் துறைகளிலும் சிங்கப்பூர் வணிகங்கள் வாய்ப்புகள் தேடி சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புக்குப் பங்காற்றலாம்,” என்றார் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான நீல் பாரிக்.
சிங்கப்பூரும் இந்தியாவும் வளர்க்க விரும்பும் ஆறு அங்க ஒத்துழைப்பை பிரதமர் மோடியின் வருகை துரிதப்படுத்தும் என்று டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் தொலைதொடர்பு ஊடகத் தொழில்நுட்பத்தின் உலகளாவியத் தலைவர் அமிட் சின்ஹா தெரிவித்தார்.
“சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசாங்க ஒத்துழைப்பு வலுவாக இருப்பதால் அந்த உறவு, இருநாட்டு வர்த்தகங்களுக்குக் கைகொடுக்கும். ஒத்துழைப்பை வலுப்படுத்த திரு மோடி சரியான நேரத்தில் வந்திருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
பல்வேறு துறைகளில் சிங்கப்பூர்-இந்திய ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பின் உலகச் சந்தைகளுக்கான நிர்வாக இயக்குநர் ஜி. ஜெயகிருஷ்ணன், பிரதமர் மோடியின் வருகை, அந்த வேகத்தைத் தொடர்ந்து காப்பதாகக் கூறினார்.
“சிங்கப்பூரில் தற்போது 10,000க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் உள்ளன. இந்த உறவின் புதுப்பிப்பால் இந்தியா, தென்கிழக்காசிய அளவில் அதிக வர்த்தக உறவை மேற்கொள்ளக் கூடும்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான தொடர்புகள் திரு நரேந்திர மோடியின் வருகைக்குப் பிறகு மேலும் அதிகரிக்கும் என்று நம்புவதாக ‘கோதாவரி டெக்னாலஜிஸ்’ அமைப்பின் இயக்குநர் லக்ஷ்மி நாராயணன் கூறினார்.
நல்ல உள்கட்டமைப்பையும் பொதுப்பயனீட்டையும் உறுதி செய்யும் இந்திய மாநிலங்களை சிங்கப்பூர் நாடும் என எதிர்பார்ப்பதாக திரு லக்ஷ்மி நாராயணன் கூறினார்.

