டிரேஸ்டுகெதர் கருவிகள் விநியோகம் முழுவதுமாக நிறைவுபெறும் வரை பள்ளி மாணவர்கள் அந்தக் கருவியை அல்லது செயலியைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கும் நடைமுறையைக் கல்வி அமைச்சு தள்ளிவைத்து இருக்கிறது. டிரேஸ்டுகெதர் கருவி விநியோக மையங்களில் சிலவற்றில் நீண்ட வரிசை காணப்பட்டதால் தங்களது தொகுதிகளில் அவை விநியோகிக்கப்படும் வரை காத்திருக்கும்படி அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து, கல்வி அமைச்சு இம்முடிவை எடுத்து உள்ளது. முன்னதாக, வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், தொடர்புகளின் தடமறிவதற்கு உதவும் விதமாக அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் டிரேஸ்டுகெதர் கருவியை அல்லது செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சு அறிவித்து இருந்தது. அதே வேளையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை அல்லது மாணவர் அட்டையைப் பயன்படுத்தி வருட அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்து இருந்தது. இப்போது நடப்பில் இருக்கும் 'சேஃப்என்ட்ரி' மின்னிலக்க வருகைப்பதிவு முறை அதன்பின் செல்லுபடியாகாது. எல்லா மாணவர்களும் எல்லா நேரங்களிலும் கைபேசி பயன்படுத்துவது சாத்தியமற்றதாக இருக்கலாம் என்பதால் டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற்று, அதைப் பயன்படுத்தும்படி பெற்றோர்களையும் மாணவர்களையும் அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது. டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலியைப் பயன்படுத்தாத மாணவர்களுக்குப் பள்ளிகளில் நுழைவு அனுமதி மறுக்கப்படாது. என்றாலும், பள்ளிகளுக்கு வெளியே இடம்பெறக்கூடிய துணைப்பாட நடவடிக்கைகள், கற்றல் பயணங்கள் போன்ற நடவடிக்கைகளில் அவர்களால் பங்கேற்க இயலாமல் போகலாம். டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலியைப் பயன்படுத்துவது தொடர்பில் மாணவர்களுக்குப் பள்ளி ஊழியர்கள் உதவுவர் என்று அமைச்சு உறுதிகூறியது. ஒரு டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலி, அருகிலுள்ள மற்ற டிரேஸ்டுகெதர் கருவிகள் அல்லது செயலிகளுடன் 'புளூடூத்' சமிக்ஞைகளைப் பரிமாறிக்கொள்ளும். அந்த அண்மைத்தன்மை குறித்த தரவுகள், குறியாக்கம் செய்யப்பட்டு, 25 நாள்களுக்குச் சேமித்து வைக்கப்படும் என்பதால் தொடர்புகளின் தடங்களை விரைவாகக் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது. 25 நாள்களுக்குப்பின் அத்தரவுகள் தாமாகவே அழிக்கப்பட்டுவிடும். இப்போதைக்கு, சிங்கப்பூர் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் டிரெஸ்டுகெதர் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி 38 சமூக மன்றங்களில் டிரேஸ்டுகெதர் கருவி விநியோகிக்கப் பட்டபோது, சில மன்றங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவற்றைப் பெற்றுச் சென்றனர்.
பள்ளிகளில் டிரேஸ்டுகெதர்: கல்வி அமைச்சு புதிய முடிவு
2 mins read
குறிப்புச் சொற்கள்


