ஆசிரியர்களின் அன்றாட நிர்வாகப் பணிச்சுமையைக் குறைத்து, மாணவர்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அணுக உதவும் புதிய மின்னிலக்கத் தளம் சிங்கப்பூர்ப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ளது.
‘டீச்சர் வொர்க்ஸ்பேஸ்’ (Teacher Workspace) எனப்படும் இத்தளம் 2027க்குள் கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, மாணவர்களைப் பற்றிய முழுமையான தகவல்களை ஒரே இடத்தில் வழங்கும்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் புதன்கிழமை (செப்டம்பர் 16) நடைபெற்ற பள்ளிகள் வேலைத்திட்டக் கருத்தரங்கில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இத்தகவலை அறிவித்தார்.
தற்போது 20 முன்னோடிப் பள்ளிகளில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ள இத்தளம், ஆசிரியர்கள் தகவல்களைத் தேடுவதற்குச் செலவிடும் நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, ஒரு மாணவரைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஆசிரியர்கள் வருகைப்பதிவு, தேர்வு முடிவுகள், குடும்பப் பின்னணி, நடத்தை முறைகள் உள்ளிட்ட தகவல்களுக்காக 4 முதல் 6 வெவ்வேறு மின்னிலக்கத் தளங்களையும் அறிக்கைகளையும் அணுக வேண்டியிருந்தது.
தகவல்களைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்து தொகுக்க வேண்டியிருந்ததால் கால விரயமும் கூடுதல் பணிச்சுமையும் ஏற்பட்ட நிலையில், ‘டீச்சர் வொர்க்ஸ்பேஸ்’ மூலம் ஒரே இடத்தில் மாணவர்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான விவரங்களை ஆசிரியர்கள் எளிதாக அணுக முடியும்.
இத்தளத்தைத் தொடக்கத்திலிருந்தே சோதித்து அமைச்சுக்குக் கருத்துகளை வழங்கிவரும் முன்னோடிப் பள்ளிகளுள் ஒன்றான லியன்ஹுவா தொடக்கப்பள்ளியின் முதல்வர் பமேலா கியூ, இத்தொழில்நுட்பத்தின் தாக்கத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு காரை ஓட்டும் ஓட்டுநருக்கு அதன் முகப்புப் பலகையிலேயே எரிபொருள் அளவு, வெப்பநிலை, நீர் அளவு அனைத்தும் தெரிந்துவிடும். அவர் காரின் முன்பகுதியைத் திறந்து ஒவ்வொன்றாகச் சோதிக்கத் தேவையில்லை. ‘டீச்சர் வொர்க்ஸ்பேஸ்’ தளமும் ஆசிரியர்களுக்கு அதே போன்ற ஒரு வசதியைத் தருகிறது,” என்று திருவாட்டி பமேலா கியூ விவரித்தார்.
புதிய மின்னிலக்கத் தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கும்போது ஆசிரியர்களுக்குத் தொடக்கத்தில் தயக்கம் இருந்தாலும், அவர்களின் தேவைகளை மையமாக வைத்து இத்தளம் வடிவமைக்கப்பட்டதால், இதைக் கற்றுக்கொண்டு பயன்படுத்துவது எதிர்பார்த்ததைவிட மிக எளிதாக இருந்ததாகத் திருவாட்டி கியூ குறிப்பிட்டார்.
இத்தளத்தில் உள்ள ‘மாணவர் விவரங்கள்’ பகுதி மாணவரின் கல்வி, நற்பண்புகள், சமூகப் பிணைப்பு, தலைமைத்துவத் திறன் ஆகியவற்றை ஒரே இடத்தில் தெளிவாகக் காட்டுவதாக அவர் கூறினார்.
பழைய அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தாமல், ஆக அண்மைய நிகழ்நேரத் தரவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்குத் தேவையான ஆதரவை உடனுக்குடன் தீர்மானிக்க இத்தளம் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், துணைப்பாட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள், தங்கள் வகுப்பில் இல்லாத மாணவர்களின் பின்னணியையும் நிதித் தேவைகளையும் எளிதில் அறிந்து அவர்களுடன் ஆழமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடிவதாகத் திருவாட்டி கியூ குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் இடையே நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களின் போது தரவுகளைச் சேகரிக்க நேரத்தைச் செலவிடாமல், மாணவர்களின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்த ஆழமான ஆலோசனைகளில் ஈடுபட இத்தளம் வழிவகுத்துள்ளதாக அவர் கூறினார்.
வருங்காலத்தில் இத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு வசதிகள் சேர்க்கப்பட்டு, நிர்வாக அறிக்கைகளின் முதல் வரைவை அமைப்பு தானாகவே உருவாக்கித் தரும் என்பதால் ஆசிரியர்களின் வேலை இன்னும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
