அறுவை சிகிச்சை கட்டண வரம்பு விரிவடைகிறது

அறுவை சிகிச்சை கட்டண வரம்பு விரிவடைகிறது

2 mins read
c1353f44-1c85-469a-a6e9-9500d167039b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனியார் துறையில் அறிமுகம் செய்யப்பட் அறுவை சிகிச்சைக்கான கட்டண வரம்பை எல்லாவிதமான அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கும் சுகாதார அமைச்சு விரிவுபடுத்தி உள்ளது. சில மருத்துவமனைக் கட்டணங்களுக்கான புதிய வரம்பையும் அது வெளியிட்டு உள்ளது.

கட்டண வரம்பு விரிவாக்கம் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது. அறுவை சிகிச்சைக்கான கட்டண வழிகாட்டிகள் முதன்முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் அறுவை சிகிச்சைகளுக்கான கட்டணத்தை மிதமான அளவில் வைத்திருக்க அது உதவியது.

மேலும், அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளைச் சமாளிப்பதற்கான பெரியதொரு உத்தியின் ஒரு பகுதியாகவும் கட்டண வரம்பு திகழ்ந்ததாக அமைச்சு நேற்று கூறியது.

குறிப்பிட்ட அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்னும் விவரங்களை நோயாளிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் தெரிந்துகொள்ள கட்டண வழிகாட்டி உதவியது.

தற்போது அந்தக் கட்டண வரம்பு பணவீக்க அதிகரிப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணர்களின் கட்டணம் தவிர்த்து மருத்துவமனைக் கட்டணங்களுக்கான புதிய வரம்பு, மருத்துவக் கட்டணங்கள் நியாயமாக உள்ளனவா என்பதன் தொடர்பில் நோயாளிகளுக்கு தெளிவைத் தரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தங்களது வெவ்வேறு மருத்துவக் கட்டணங்களிலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்குமாறு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவமனைக் கட்டணங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ள வரம்புக்குள் தங்களது கட்டணத்தை அமைத்துக்கொள்ள மருத்துவர்களும் மருத்துவமனை நடத்துநர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது.

கட்டண வரம்பு உத்தி நல்ல பலனைத் தருவதாகக் குறிப்பிட்ட அமைச்சு, 2018ஆம் ஆண்டு கட்டண வழிகாட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டபோது 20 விழுக்காட்டு மருத்துவக் கட்டணக் குறிப்புகள் வரம்புக்கு மேல் இருந்ததாகவும் தற்போது அது பாதியாக, 10 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இடைநிலை தனியார் அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணம் நிலையாகத் தொடரும் வேளையில் அதிகப்படியான கட்டணங்கள் குறைந்து வந்துள்ளதாகவும் அது கூறியது.

தொடக்கத்தில் 200 பொதுவான அறுவை சிகிச்சைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கட்டண வரம்பு தற்போது அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டணத்திற்கும் பொருந்தும் வகையில் விரிவாக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அதன்மூலம் எஞ்சியுள்ள 1,900 நடைமுறைகளும் வரம்பிற்குள் வருகின்றன.