தேசிய பராமரிப்புக் காப்புறுதித் திட்டமான ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டத்தில் சேரும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுமெனச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவ. 14) தெரிவித்தது.
அதாவது,1980 ஆம் ஆண்டுக்குமுன் பிறந்த, கடுமையான உடற்குறை ஏதுமில்லாத சிங்கப்பூரர்கள், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்தால் 10 ஆண்டுகளுக்குமேல் கட்ட வேண்டிய சந்தாக் கட்டணத்தை ஈடுகட்ட $3,000 வரை ஊக்கத்தொகையைப் பெறலாம்.
முன்னதாக இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையின்படி, $4,000 வரை பெற முடியும். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதில் இணைவோருக்கு அது பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் காப்புறுதித் திட்டதின்மூலம் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை 205,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பயனடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு ஊக்குவிப்பதாக அமைச்சு கூறியது.

