தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவ விடுப்புச் சான்றிதழ் தொடர்பில் தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சு

2 mins read
0bd67875-e16f-4e6b-98eb-835f713c079e
மருத்துவ விடுப்புச் சான்றிதழ் தொடர்பில் தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர்கள், மேல் நடவடிக்கைக்காகத் தொழில்முறைக் கண்காணிப்பு அமைப்புகளிடம் பரிந்துரைக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மருத்துவர்களோ பல் மருத்துவர்களோ தங்கள் பணி தொடர்பான சட்டங்களுக்குப் புறம்பாக நடந்துகொள்வது தெரியவந்தால் அவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை அல்லது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தவறிழைத்த மருத்துவர்கள், மேல் நடவடிக்கைக்காகத் தொழில்முறைக் கண்காணிப்பு அமைப்புகளிடம் பரிந்துரைக்கப்படுவர் என்று மே 28ஆம் தேதி, அமைச்சு கூறியது.

மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கும்போது மருத்துவர்கள் கடமையுணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை நினைவுறுத்தி ஏப்ரல் 22ஆம் தேதி, அமைச்சு அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.

அதுகுறித்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அமைச்சு பதிலளித்தது.

தொலைமருத்துவ முறை நடப்புக்கு வந்தபின் மருத்துவ விடுப்புச் சான்றிதழைக் காட்டி விடுப்பு கோருவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக முதலாளிகள், அரசாங்க அமைப்புகள், பள்ளிகள் ஆகிய தரப்புகள் அமைச்சிடம் தெரிவித்திருந்தன.

மேலும், உண்மையில் உடல்நலத்துடன் இருப்போருக்கும் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் பள்ளிக்கோ வேலைக்கோ செல்ல விரும்பாதவர்கள் தொலைமருத்துவச் சேவை வாயிலாக மருத்துவ விடுப்புச் சான்றிதழை எளிதில் பெறுவதாகவும் அவை குறிப்பிட்டிருந்தன.

சுகாதாரப் பராமரிப்புச் சேவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்துத் திட்டமிடுவதாகவும் அமைச்சு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்கீழ், நோயாளிக்கு வழங்கப்படும் மருத்துவ விடுப்புச் சான்றிதழில் மருத்துவரின் பெயரும் அவரது மருத்துவச் சேவைப் பதிவு எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம்.

மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் தவறான முறையில் வழங்கப்படுவது குறித்த தரவுகள் அமைச்சிடம் இருக்கின்றனவா அல்லது நிறுவனங்களும் பள்ளிகளும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறதா என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, “மருத்துவச் சான்றிதழ்கள் தவறாக வழங்கப்படுவதாகப் பல்வேறு தரப்புகள் அமைச்சிடம் தெரிவித்திருந்தன.

“அமைச்சு அந்தக் கருத்துகளை மறுஆய்வு செய்து வருகிறது. மருத்துவப் பதிவுச் சட்டத்துக்குப் புறம்பாக மருத்துவர்கள் யாரேனும் நடந்துகொண்டது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறியது.

சுகாதாரப் பராமரிப்புச் சேவை சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் திருத்தத்தின்கீழ், மருத்துவ அல்லது பல் மருத்துவச் சேவை வழங்கினால் மட்டுமே நோயாளிக்கு மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்க முடியும் என்று அமைச்சு விளக்கியது.

மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அமைச்சு திட்டமிடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து முதலாளிகள், ஊழியர்கள் என இரு தரப்பினரும் இதுகுறித்துக் காரசாரமாக விவாதித்தனர்.

இதனால், உண்மையாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவ விடுப்புச் சான்றிதழ் கிடைக்காமல் போகக்கூடும் என்று சிலர் அச்சம் தெரிவித்தனர்.

வேலையிடச் சூழல் மோசமானால் ஊழியர்கள் உடல்நலத்துடன் இருந்தாலும் போலியான மருத்துவ விடுப்புச் சான்றிதழைச் சமர்ப்பிப்பர் என்று சிலர் கருத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்