கொச்சி: நடிகர் மோகன்லால் கேரள வனத்துறையின் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பொதுமன்னிப்புத் திட்டத்தின்கீழ், தம்வசம் இருந்த 10 யானைத் தந்தங்களையும் தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களையும் வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள மோகன்லாலின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கே நான்கு யானைத் தந்தங்களும் தந்தத்தால் செய்யப்பட்ட சில கலைப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்தச் சம்பவம் தொடர்பாக மோகன்லால்மீது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை ஒரு பக்கம் நீடித்த வேளையில், 2016ஆம் ஆண்டு மோகன்லாலுக்கு யானைத் தந்தங்களையும் தந்தப் பொருள்களையும் வைத்திருக்க மாநில அரசு உரிமையாளர் சான்றிதழ்களை வழங்கியது. அதனை எதிர்த்து வழக்குப் போடப்பட்டது.
வழக்கு விசாரணை முடிவில், அந்தச் சான்றிதழ் செல்லாது என கடந்த ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, வனம் தொடர்பான பொருள்களைத் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் பொதுமன்னிப்புத் திட்டத்தைக் கேரள வனத்துறை அறிவித்தது.

