சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடுதலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் உறுதி அளித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை ஆகியவை வேலைகளையும் திறன்களையும் மறுவடிவமைக்கும் என்பதால் சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டான் வலியுறுத்தினார்.
வேலைநலன் திட்டம், படிப்படியான சம்பள உயர்வு முறை மூலம் குறைந்த வருமான ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பச் சீர்குலைவுகள், உலகளாவிய போட்டி ஆகியவற்றால் எழும் பதற்றங்களிலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றார் அவர்.
சனிக்கிழமை (5 ஏப்ரல்) மனிதவள அமைச்சின் 70வது ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அமைச்சு எடுத்துள்ள மூன்று உத்திபூர்வ மாற்றங்கள் குறித்துப் பேசினார்.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரர் நால்வரில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பார் என்பதால் மனிதவள அமைச்சு முதலாளிகளுடன் இணைந்து நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை வழங்குவது குறித்துப் பேசிவருவதாக டாக்டர் டான் சொன்னார்.
இது மூத்தோர் வளர்ச்சியடைவதற்கும் அவர்களையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் வழியமைக்கும்.
மூத்த குடிமக்களின் உற்பத்தித் திறனை நீடிக்கும் விதமாக 2030க்குள் ஓய்வுபெறும் வயதை 65க்கும் மறுவேலைவாய்ப்பு வயதை 70க்கும் படிப்படியாக உயர்த்தவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இறுதியாக, கூடுதல் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஊழியர்கள், வர்த்தகங்கள் என இருதரப்புடனும் ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தவிருப்பதாகச் சொன்ன டாக்டர் டான், மனிதவள அமைச்சு முத்தரப்புப் பங்காளிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றார்.
ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னாள் துணைப் பிரதமர் எஸ் ஜெயக்குமார், மனிதவள மூத்த துணை அமைச்சர்கள் ஸாக்கி முகம்மது, கோ போ கூன், துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், மனிதவள அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் எங் சி கெர்ன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அமைச்சின் 70ஆம் ஆண்டுநிறைவை ஒட்டிப் பேசிய அமைச்சர் டான், மனிதவள அமைச்சிற்குப் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர்கள், அதன் வளர்ச்சிக்குப் பங்களித்த அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“1955ல் மனிதவள அமைச்சு நிறுவப்பட்டபோது நிச்சயமற்ற சூழல் நிலவியது. அந்த நேரத்தில் இணக்கமான தொழில்துறை உறவுகளுக்கான நீடித்த அடித்தளத்தை அமைத்து, முத்தரப்பு உறவை உருவாக்குவதற்கு மனிதவள அமைச்சு வழிவகுத்தது. இன்றைய போட்டித்தன்மைமிக்க பொருளாதாரச் சூழலில் மனிதவள அமைச்சு சிங்கப்பூரர்களின் போட்டித்தன்மையையும் வேலைவாய்ப்புகளையும் வளர்க்கப் பேரளவில் முதலீடு செய்துள்ளது,” என்று டாக்டர் டான் கூறினார்.
தாம் மனிதவள அமைச்சிற்குப் பொறுப்பேற்றபோது, கொள்ளைநோய்ப் பரவல் காலகட்டமாக இருந்ததை அவர் குறிப்பிட்டார்.
“கொவிட்-19 கிருமிப்பரவல் பலவற்றைக் கற்றுத்தந்தது. மேம்பாடு தேவைப்படும் வெளிநாட்டு ஊழியர் விவகாரங்களில் கவனம் செலுத்தினோம். ‘டுக்காங் இன்னொவேஷன் லேனில்’ கட்டப்பட்டு வரும் தங்குவிடுதி சிங்கப்பூர் எட்டவிருக்கும் உயரிய தரநிலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதேநேரத்தில் சிங்கப்பூரர்கள்மேல் அக்கறை கொள்ளும் விதமாக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைகளும் பெருமிதம் அளிக்கின்றன,” என்று டாக்டர் டான் விளக்கினார்.
70 ஆண்டுகளில் சிங்கப்பூர் ஊழியரணி கண்டுள்ள பரிணாமம் அதிகம். இதர வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரின் தற்போதைய வேலையின்மை விகிதம் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவு. தொழிலாளர் பங்களிப்பு ஏறக்குறைய 70 விழுக்காடு.
கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளம் 5.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கொண்டாட்ட நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அங்கமாக மனிதவள அமைச்சின் புதுப்பிக்கப்பட்ட இலச்சினை வெளியிடப்பட்டது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட இந்த இலச்சினை ஏப்ரல் 5ஆம் தேதி முதல் பயன்படுத்தப்படும்.
அதோடு, மனிதவள அமைச்சின் 70 ஆண்டுகால வரலாற்றையும் நாட்டைக் கட்டியெழுப்ப அமைச்சு அளித்த பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாக நினைவுப் புத்தகம் வெளியிடப்பட்டது.
“இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட மைல்கற்கள் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் ஆற்றிய பங்குக்கு ஒரு சான்று,” என்று அமைச்சர் டான் தெரிவித்தார்.
மின்புத்தகத்தை go.gov.sg/mom70 தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

