சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை போடுவது, ஆபத்தான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது என்றிருந்தார் 15 வயதாகும் ஏப்ரல் (உண்மைப் பெயரன்று).
இதனால், அவர் சிங்கப்பூர் சிறுமியர் இல்லம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்குக் கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் அவர் இருக்க வேண்டும்.
சிறுமியர் இல்லத்திலும் சக பெண்களுடன் மோதிக்கொள்ளும் போக்கு தொடர்ந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறார் ஏப்ரல்.
சிறுமியர் இல்லத்தில் இருக்கும் நேரத்தில் ஏப்ரல் தன் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல பிணைப்பை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
அவ்வப்போது பெற்றோர் தன்னைப் பார்க்க வரும்போது அவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் நேரத்தைச் செலவிட அவர் முயல்கிறார்.
பொதுவாகவே தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒருவர் என்று தமிழ்முரசிடம் பகிர்ந்துகொண்ட ஏப்ரல், இசை, நடனம், மேடை நாடகங்கள்மீது ஆர்வமிக்கவர்.
அண்மையில் நடந்த ‘சாங்ரைட்டிங் ஃபார் ஹோப்’ எனும் நிகழ்ச்சி அவரின் ஆர்வத்துக்கு கைகொடுப்பதாக அமைந்தது.
பாடலை எழுதியும் பாடியும் ஏப்ரல் தன்னை நிகழ்ச்சியில் ஈடுபடுத்திக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, தன் தம்பிக்காக அவர் எழுதியிருந்த அப்பாடல் நிகழ்ச்சியில் மேடையேறிய தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இளையர் இல்லப் பிரிவும், எஸ்பிளனேடும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வழியமைத்துத் தருகின்றன.
‘சாங்ரைட்டிங் ஃபார் ஹோப்’ நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) எஸ்பிளனேட் கடலோரக் கலையரங்கில் மேடையேறியது. இந்த நிகழ்ச்சி எஸ்பிளனேட் சமூக ஈடுபாட்டுத் திட்டமாகவும் இருக்கிறது.
அதில் சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தங்களது திறன்களை வெளிக்காட்டும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்களில் ஒருவரான ஏப்ரல், தன் தம்பிக்காக எழுதிய பாடலைப் பாடினார்.
பார்வையாளர்களில் தன் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாகத் தன் தம்பியும் இருந்தது ஏப்ரலுக்கு உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது.
பாடல்கள் எழுதுவது தன்னை மேலும் நெறிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட ஏப்ரல், வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் ஊக்கம் பிறந்துள்ளதாகவும் கூறினார்.
முதன்முறையாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏப்ரல், முன்னர் தன் தம்பியிடம் வெளிப்படுத்தாத அன்பையும் பரிவையும் அப்பாடல் மூலம் வெளிக்காட்ட விரும்பினார்.
தன்னைவிட 10 வயது இளையவரான தன் தம்பியைத் தான் எப்போதும் நேசிப்பதாகவும் மூத்த சகோதரியாகத் தான் எப்போதும் அவருடனேயே இருக்கப் போவதாகவும் உணர்ச்சிப்பெருக்குடன் சொன்னார் அவர்
“தம்பியிடம் நான் பாசத்தை வெளிக்காட்டியதில்லை. இந்த வாய்ப்பு மூலம் நான் அவனுக்கு என் அன்பை வெளிப்படுத்தினேன்,” என்றார் ஏப்ரல்.
“எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. என் மகளால் பாடல்கள் பாட முடியும் என்பதை நான் இப்போதுதான் அறிந்துகொண்டேன்,” என்று ஏப்ரலின் தாயார் சங்கீதா பால்ராஜ், 34, நெகிழ்ச்சியுடன் கூறினார்.

