தனியார் வங்கிகள் வழங்கும் நிதி சேவைகளுக்குத் தகுதி பெறாத சிங்கப்பூரில் உள்ள சிறிய மூலதனங்கள் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய நிறுவன வகையான முதலீட்டு வாய்ப்பை ஆர்கி பைனான்ஸ் நிறுவனம் விரைவில் வழங்கவிருக்கிறது.
சிங்கப்பூரில் அடித்தளம் கொண்ட அந்த நிதி நிர்வாக நிறுவனம் இவ்வாண்டு அதன் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
ரொக்கம், வருவாய், வளர்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டு எளிமையாக்கப்பட்ட நிதித் தளத்தில் பெருஞ்செல்வந்தர்களை உள்ளடக்கிய அதிக முதலீட்டாளர்களை அடைய அந்த நிறுவனம் தயாராகிவருகிறது.
மூலதனச் சந்தை சேவைக்கான உரிமத்தை சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் அந்நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி, நிதிப் பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டப்படி முறைப்படுத்தப்பட்ட நிதி நடவடிக்கைகளில் அந்நிறுவனம் செயல்படலாம். அவற்றில் மூலதனச் சந்தை திட்டங்களும் நிதி நிர்வாகமும் அடங்கும்.
இப்புதிய நிறுவனம் வரவிருக்கும் மாதங்களில் அதன் முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. பணப்புழக்கத்தைக் குறைத்துவிடாமல், பாரம்பரியமாக பயன்படும் சேமிப்பு கணக்குகளைவிட அதிக லாபம் வழங்கும் வகையில் செயல்படும் ஓர் ரொக்க வருமானத் திட்டமாக அது அமையும். அதனைத் தொடர்ந்து வருவாய் வளர்ச்சிக்கான திட்டத் தொகுப்புகளும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற பல திட்டங்களை ஒருங்கிணைத்து, ஆர்கி பைனான்ஸ் நிறுவனம் ஒரு முழு சில்லறை நிதி மேலாண்மைத் தளத்தை உருவாக்க விழைகிறது.

