சிங்கப்பூர் மத்திய வங்கி சிங்கப்பூரின் நிதிக் கொள்கையை இந்த வாரம் மாற்றாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி, அமெரிக்க வரியால் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் மத்திய வங்கி அந்த முடிவை எடுத்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நிதிக் கொள்கையை மாற்றாது என புளூம்பர்க் கருத்தாய்வில் பங்கேற்ற 20 பொருளியல் வல்லுநர்களில் 16 வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஆண்டுக்கு எப்படியும் நான்கு முறை கொள்கையை மறுஆய்வு செய்யும் சிங்கப்பூர் நாணய ஆணையம், ஜனவரியிலும் ஏப்ரலிலும் வளர்ச்சிக்கு ஆதரவாக அதன் கொள்கையைத் தளர்த்தியது.
அமெரிக்காவின் மத்திய வங்கி, இதற்கிடையே, செப்டம்பருக்கான கடன் செலவினங்களைக் குறைத்தது. டிசம்பருக்குப் பிறகு அமெரிக்க வங்கி அவ்வாறு செய்திருப்பது இது முதன்முறை.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் அண்மை நாள்களில் மேலும் மோசமானது.
சீனா, அரிய கனிம ஏற்றுமதிகள்மீது அண்மையில் புதிய வரிகளை விதித்தது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூடுதலாக 100 விழுக்காட்டு வரியை சீனாமீது அறிவித்தார்.
மோசமடையும் வர்த்தகப் போரை முன்னிட்டு வர்த்தகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
அக்டோபர் 14ஆம் தேதி, மூன்றாம் காலாண்டுக்கான முதற்கட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளை சிங்கப்பூர் வெளியிடும். ஜூன் காலாண்டுக்குப் பிறகு பொருளியல் மெதுவடைந்திருப்பதை அது பெரும்பாலும் காட்டும். அதேநேரம், அடிப்படை பணவீக்கம் குறைந்தது.