பணமோசடி: இரு நிறுவனங்களின் இயக்குநர், செயலாளர் மீது குற்றச்சாட்டுகள்

பணமோசடி: இரு நிறுவனங்களின் இயக்குநர், செயலாளர் மீது குற்றச்சாட்டுகள்

2 mins read
8ce0e0ca-a13a-4ab7-8f97-404cd025e2b5
நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் சந்தேக நபர்கள் இருவர் மீதும் ஆளுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாகக் கூறப்படுவதன் தொடர்பில் இரண்டு நிறுவனங்களின் இயக்குநர், செயலாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

35 வயது ஆண்ட்ரூ போ வெய் யாங், 36 வயது டெனிஸ் போ வெய் சோங் இருவர் மீதும் ஊழல், போதைப்பொருள் கடத்தல், மற்றக் கடுங்குற்றச்செயல்கள் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் அவர்கள்மீது மேலும் இரு குற்றச்சாட்டுகளும் கொண்டுவரப்பட்டன.

குற்றப்பத்திரிகையின்படி, ஃபியோபா, சிக்மா ஆகிய நிறுவனங்களின் செயலாளராக இருக்கிறார் டெனிஸ் போ. இரு நிறுவனங்களிலும் இயக்குநராக இருக்கிறார் ஆண்ட்ரூ போ. அந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பதுபற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையில் ஃபியோபா, சிக்மா நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் முறையே 1,380,000 வெள்ளியும் 66,000 வெள்ளியும் போடப்பட்டன.

வெளிநாடுகளில் மோசடிக்கு ஆளானோரிடமிருந்து பெறப்பட்ட பணம் அது என்று சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறை தெரிவித்தது.

நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. சிங்கப்பூரின் நிறுவனப் பதிவு விதிமுறைகளின்படி, உள்ளூர்வாசி ஒருவரை இயக்குநராக நியமிக்க வேண்டியது கட்டாயம்.

நிறுவனங்களைப் பதிவுசெய்ய உதவிய டெனிஸ், இரு நிறுவனங்களுக்கும் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அந்நிறுவனங்களுக்கு இயக்குநராக இருக்கும்படி அவர் ஆண்ட்ரூ போவைக் கேட்டுக்கொண்டார். ஆண்ட்ரூவுடன் சேர்ந்து நிறுவனங்களுக்கான வங்கிக் கணக்குகளை டெனிஸ் போ திறந்தார்.

இருவரும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது.

அவர்களின் வழக்கு, வரும் மே மாதம் எட்டாம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்