சிங்கப்பூர் வரலாற்றில் ஆக அதிக அளவில் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புடைய கள்ளப்பணப் பரிமாற்றக் குற்றங்கள் நடந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பரச் சொத்துகளை விற்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக அது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சொத்து ஆலோசனை நிறுவனமான டெலாய்ட், பல சொத்து முகவர்களை அதுபோன்ற இடங்களை விற்பனை செய்வதற்கான திட்டத்துடன் தொடர்புகொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
கள்ளப் பணப்பரிவர்த்தனைக் கும்பலிடம் இருந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டச் சொத்துகளை விற்பதற்கான விரிவான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்க அதிகாரிகள் ஏறத்தாழ 200 சொத்துகளை முடக்கியுள்ளனர். அந்த சொத்துகள் பிரதான இடங்களாக ஆர்ச்சர்ட் ரோடு, செந்தோசா போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன. அவ்வாறு பறிமுதலான சொத்துகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் எனவும் விவரம் அறிந்தோர் குறிப்பிட்டனர்.
டெலாய்ட் நிறுவனமும் காவல்துறையும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
தென்சீனாவின் ஃபுஜியான் வட்டாரத்திலிருந்து இங்கு வந்து S$3 பில்லியன் மதிப்புள்ள பணப்பரிமாற்றக் குற்றம் புரிந்த கும்பலின் சொத்துகளை அரசாங்கம் விற்பனை செய்வது அந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் ஏற்கெனவே அந்தக் கும்பல் சார்ந்த கார்கள், சில குடியிருப்புகள், வர்த்தகச் சொத்துகள் போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விலைமதிப்புள்ள பொருள்களின் வரிசையில் புகழ்பெற்ற விளம்பரப் பெயர்களைக் கொண்ட பெண்களின் கைப்பைகள், கைக்கடிகாரங்கள், நகைகள், ஆபரணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் இணையத்தில் விற்பனைக்கு விடப்படும் என்று டெலாய்ட் நிறுவனம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேசமயம், 80 சொத்துகளுக்கு மேற்பட்டவை ஏலத்துக்கு விடப்படும் எனவும் அந்நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் இதுகுறித்து விவரங்களை வெளியிட்ட டெலாய்ட் நிறுவனம் செப்டம்பர் 7ஆம் தேதி முதற்கட்ட விற்பனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி நகை, ஆபரணங்களுக்கான ஏலமும் கைப்பைகளுக்கான ஏலமும் இரு வெவ்வேறு நேரங்களில் அன்றைய தினம் விடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.


