மோசடி செய்து சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும், ஜோகூர் பாருவை தளமாகக் கொண்ட ஒரு கும்பலை, சிங்கப்பூர், மலேசிய காவல்துறைகள் முறியடித்தன.
சிங்கப்பூர் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பணமோசடிச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 12 மலேசியர்கள், ஆகஸ்ட் 9ஆம் தேதி நடத்தப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர்.
மோசடி வழக்குகளின் தொடர்பில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் அரச மலேசியக் காவல்துறையுடன் தான் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 18ஆம் தேதி கூறியது.
புலனாய்வுகள் மற்றும் ஆதாரங்களைச் சேகரிப்பதன் மூலம், மலேசியாவின் ஜோகூரில் செயல்பட்டு வரும் பணமோசடிக் கும்பல் ஒன்றை இருநாட்டுக் காவல்துறையினரும் அடையாளம் கண்டனர்.
அரச மலேசியக் காவல்துறையின் ஜோகூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஜோகூரில் இரண்டு இடங்களில் சோதனை நடத்தி சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 22 வயது பெஸ்மண்ட் ஹுவான் யூ காங், ஆகஸ்ட் 18ஆம் தேதி சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டு, ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று இங்குள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மோசடிகள் மூலம் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுவதற்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க வெளிநாட்டினரை சிங்கப்பூருக்கு ஹுவான் அழைத்து வந்தார் என்று நம்பப்படுவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
ஹுவான் தற்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வரும்.