ஏன், எதற்கு என்று விசாரிக்காமல் தங்களது வங்கிக் கணக்கையும் சிங்பாஸ் கணக்கையும் பிறரிடம் தருவோருக்கு குறைந்தபட்சம் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த நடைமுறையை உடனே அமல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அதுபோன்ற குற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க சிறைத் தண்டனை ஒரு வழக்கமாக இருக்க வேண்டும் என தண்டனை ஆலோசனைக் குழு புதன்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைத்து உள்ளது.
அந்தத் தண்டனை, குற்றத்திலிருந்து விலகி இருப்பதற்கான அறிகுறியைக் கடுமையாக உணர்த்தும் என்றும் அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
அதாவது, அந்தக் குற்றத்தை புரிவோருக்கான சிறைத் தண்டனை ஆகஸ்ட் 21 முதல் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது இருக்க வேண்டும் என்பது அந்தப் பரிந்துரை.
தற்போது அந்தக் குற்றத்திற்கு சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகின்றன.
இளையர் நீதிமன்றத்தால் கையாளப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் தவிர, மோசடி உடந்தை குற்றம் புரியும் 21 வயதுக்குக் குறைந்த இளையர்களுக்கும் ஆறு மாத குறைந்தபட்ச சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனைக் குழு குறிப்பிட்டு உள்ளது.
சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று கூறிய குழு, கடந்த ஐந்தாண்டுகளில் மோசடிகள் ஏழு மடங்கு அதிகரித்தது எவ்வாறு என்பதைக் கவனிக்க வேண்டும் என்றது. மோசடிகளில் பணம் இழப்பதும் நான்கு மடங்கு அதிகரித்து உள்ளது.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 46,563 மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. மோசடிகளில் சிக்கிய பொதுமக்கள் $651.8 மில்லியன் பணத்தை இழந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களிடம் மேற்கொள்ளப்படும் மோசடிகளின் மோசமான தாக்கம் காரணமாக குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைக் குழு பரிந்துரைத்து உள்ளது.
குறிப்பாக, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள இயலாத மூத்தோரிடம் மோசடி செய்வோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டது.
அவர்களை ஏமாற்றி குற்றம் புரிவோருக்கான தொடக்கத் தண்டனை தற்போது இருப்பதைக் காட்டிலும் குறைந்தபட்சம் 25 விழுக்காடு அதிகமாக இருக்க வேண்டும் என்பது குழுவின் பரிந்துரை.
அந்த ஆலோசனைக் குழுவில் நீதித் துறை, சட்டம் மற்றும் உள்துறை அமைச்சுகள், காவல்துறை, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், வழக்கறிஞர் சங்கம் ஆகிவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்று உள்ளனர்.

