சிங்கப்பூரில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான இரவுநேர எஃப்1 கார் பந்தயத்திற்கு செப்டம்பர் 21ஆம் தேதி ‘அழையா விருந்தாளி’ வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உடும்பு ஒன்று பந்தயத் தடத்தில் குறுக்கிட்டதால் பயிற்சிச் சுற்றைச் சிறிது நேரம் நிறுத்த நேரிட்டதாக எஃப்1 அதிகாரபூர்வ எக்ஸ் தளம் குறிப்பிட்டது.
சென்ற ஆண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்தது நினைவுகூரத்தக்கது.
அதற்குமுன் 2016ஆம் ஆண்டு ரெட் புல் ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ராட்சத உடும்பு ஒன்றைக் கண்டதும் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
பந்தயத் தடத்தின் நடுவில் உடும்பு நிற்பதாகக் கூறியபடி அதைக் கடந்து சென்றார் ஓட்டுநர் ஃபெர்னாண்டோ அலோன்சோ.
உடும்பைப் பிடிக்க உடனடியாக விரைந்தனர் ஊழியர்கள். அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் ஓடியது உடும்பு.
விறுவிறுப்பான இந்தக் காட்சியும் ஒரு பந்தயம் போன்றே அமைந்தது.
பார்வையாளர்கள், “அதை விட்டுவிடுங்கள்,” என்றும் “தயவுசெய்து தொடாதீர்கள்,” என்றும் கூச்சலிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
நல்லவேளையாகக் காயம் ஏதுமின்றி பந்தயத் தடத்திலிருந்து வெளியேறியது அந்த உடும்பு.