பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் குரங்குகள் நடமாட்டம்

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் குரங்குகள் நடமாட்டம்

1 mins read
dbca7273-80c3-45a6-931d-54cef2955cc5
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தை நிர்வகிக்கும் ஜேடிசி நிறுவனம், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் குரங்குகள் நடமாட்டம் குறித்து, ஒருங்கிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது. - படம்: சாவ் பாவ்

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 4) காலை 9 மணியளவில் பல குரங்குகள் தென்பட்டன.

இதையடுத்து, குரங்குகளைப் பார்க்க நேர்ந்தால் அமைதியாக இருக்குமாறும், அவற்றிடமிருந்து பாதுகாப்பான தொலைவில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறும் அரசாங்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஃபேஸ்புக் பதிவொன்றில் வெளியிடப்பட்ட காணொளியில் 12க்கும் மேற்பட்ட குரங்குகள் பொங்கோல் மின்னிலக்க வட்டாரக் கட்டடம் ஒன்றின்மேல் ஏறுவதைக் காணமுடிந்தது.

அந்த மின்னிலக்க வட்டாரத்தை நிர்வகிக்கும் ஜேடிசி நிறுவனம் ‘டவர் 98’ கட்டடத்தில் நீண்ட வால் ‘மக்காக்’ வகைக் குரங்குகள் நடமாடுவதை அறிந்துள்ளதாக ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.

அந்த அலுவலகக் கட்டடம் தயார்நிலையில் இருந்தாலும் அதனுள் எவரும் வாடகைக்கு இல்லை என்று ஜேடிசி உறுதிப்படுத்தியது. அங்கு குரங்குகள் வெகுநேரம் இருப்பதில்லை எனவும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளோம் எனவும் அது கூறியுள்ளது.

குரங்குகளுடன் யாரும் தொடர்புகொள்ளாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அது எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

‘டவர் 98’ கட்டடத்தில் பொங்கோல் கோஸ்ட் மால் கடைத்தொகுதியும் ஹோட்டல் நிறுவனம் ஒன்றும் முதல் மூன்று மாடிகளில் வரவிருப்பதாக அறியப்படுகிறது.

சம்பவம் பற்றி அறிந்ததும் அதே நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்துள்ளதாக தேசிய பூங்காக் கழகம் ஊடகங்களிடம் தெரிவித்தது. இதுபோன்ற சம்பவங்களுக்கு உதவி தேவைப்படுவோர் விலங்கு நடவடிக்கை நிலையத்தை 1800-476-1600 எண்ணில் 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்