மண்டாய் அஸ்திமாடத்திற்குச் செல்வோர், குரங்குகளின் தொல்லையைக் குறைக்க உணவுகளை அங்கேயே விட்டுச்செல்லவேண்டாம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
சிங் மிங் விழா வழிபாட்டின்போது வருகையாளர்களைக் குரங்குகள் தொந்தரவு செய்ததாக திரு லொக் ஜுன் சியொங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மே 1ஆம் தேதி பதிவிட்டதைத் தொடர்ந்து அமைப்பின் நினைவூட்டல் வந்துள்ளது.
“மண்டாய் அஸ்திமாடத்தில் சிங் மிங் வழிபாட்டில் ஈடுபட்டோரை ஒரு கூட்டமாக குரங்குகள் தொந்தரவுப்படுத்தின. உணவைப் பார்த்தவுடன் உடனே வந்து சூழ்ந்துகொள்கின்றன,” என்று கம்ப்ளெய்ண்ட் சிங்கப்பூர்ப் பக்கத்தில் திரு சியொங் பதிவிட்டார்.
“வருத்தத்திற்குரியது என்னவென்றால் குரங்குகளுக்கு மனிதர்களைப் பார்த்து பயமில்லை. தாக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்தோர் மெழுகுவர்த்திகளையும் மண்ணையும் வாரி குரங்குகள்மீது வீசினர். கூடிய விரைவில் யாருக்காவது காயம் ஏற்படப்போகிறது,” என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
வழிபாட்டுக்காக விட்டுச்செல்லப்பட்ட உணவைக் குரங்குகள் எடுக்கும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டன.
அஸ்திமாடம் வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால் குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு குறிப்பிட்டது.
குரங்குகளைப் பார்த்தால் என்ன செய்யக்கூடாது போன்ற அறிவிப்புப் பலகைகள் அஸ்திமாடத்தில் வைக்கப்பட்டுள்ளதும் அவற்றுள் ஒன்று.
“உணவுகளை அப்படியே விட்டுச்செல்லவேண்டாம் என்றும் வருகையாளர்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. படைக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அடிக்கடி அப்புறப்படுத்தப்படுகின்றன,” என்று அமைப்பு சுட்டியது.

