பொங்கோலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் குரங்குகள் நுழைந்து அட்டூழியம் செய்வதாக அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன.
அதனையடுத்து, அவற்றிற்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்வது, அவற்றைக் கூட்டமாக வனப்பகுதிக்குள் அழைத்துசெல்ல பயிற்சிகள் மேற்கொள்வது, மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் குரங்குகளைக் கருணைக் கொலை செய்வது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகம் அமையவிருக்கும் இடமாகவும் உள்ள பொங்கோலின் வடக்குப் பகுதி, நீண்ட வால் உடைய குரங்குகளின் வசிப்பிடமாகக் கடந்த ஏழு மாதமாக உள்ளது.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பொங்கோல் வட்டாரத்திலிருந்து குரங்குத் தொல்லை குறித்து கிட்டத்தட்ட 200 புகார்கள் தேசிய பூங்காக் கழகத்தை வந்தடைந்தன.
குரங்குகள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த சம்பவங்களைத் தவிர்த்து, வீடுகளுக்கும் நுழைவது, குப்பைத் தொட்டிக்குள் உணவுப் பண்டங்களைத் தேடுதல் போன்ற பிற சம்பவங்கள் குறித்தும் புகார்கள் வந்தததாக வனவிலங்கு நிர்வாகக் குழு இயக்குநர் ஹவ் சூன் பெங் கூறினார்.

