பொங்கோலில் 50 குரங்குகளைப் பிடித்த அதிகாரிகள்

1 mins read
பெரும்பாலானவை கருத்தடை சிகிச்சைக்குப் பிறகு விடுவிப்பு
198fd1ef-cadf-432f-b95d-2e8be99f04dc
கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி 436A நார்த்ஷோர் டிரைவில் உள்ள கட்டுமானத் தளத்திற்கு வெளியே நீண்ட வால் கொண்ட குரங்கு ஒன்று காணப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொங்கோல் வட்டாரத்தில் சுற்றித் திரிந்த 50 குரங்குகளைக் கடந்த ஆண்டு தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் பிடித்தனர்.

அவை அப்பகுதி மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை கருத்தடை சிகிச்சைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டன.

அக்குரங்குகளில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் முரட்டுத்தனமான நடத்தை கொண்டவை பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அகற்றப்பட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மின் கேள்விக்கு மார்ச் 4ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற அமர்வில் எழுத்துபூர்வமாக பதிலளித்தபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பொங்கோல் வட்டாரத்தில் குரங்குகள் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே அவற்றிற்கு கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதா, அப்பகுதிகளிலிருந்து பிடிக்கப்பட்ட குரங்களின் எண்ணிக்கை, கருத்தடை செய்யப்பட்ட மற்றும் கருணைக் கொலை செய்யப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறித்து திரு ஜேமஸ் லிம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பொங்கோல்வாசிகளுக்குக் குரங்குகள் தொல்லை கொடுப்பது குறித்து தேசிய பூங்காக் கழகத்திற்குப் பல புகார்கள் வந்ததாகவும் பொதுப் பாதுகாப்புக் கருதி புகார்கள் அதிகமாக வந்த இடங்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் திரு லீ தெரிவித்தார்.

குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர,அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்குமுன் அவற்றின் எண்ணிக்கையைக் குறித்து கழகம் விரிவான ஆராய்ச்சியையும் மதிப்பீட்டையும் நடத்தியதாக அமைச்சர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்