குரங்கம்மைத் தொற்றுப் பரவலைச் சமாளிப்பதற்கான சிங்கப்பூரின் தயார்நிலை குறித்த ஆக அண்மைய விவரங்களைத் தெரிவிப்பதற்காக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அடுத்த வாரம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க சுகாதார அமைச்சு குழுமம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் இடையில் ஏற்படுத்தப்பட்டு உள்ள பங்காளித்துவத்தைக் குறிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை சிங்கப்பூரில் 13 குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சுகாதார அமைச்சின் வாராந்தர தொற்று நிலவர அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்று உள்ளது. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஏழு பேர் குரங்கம்மைத் தொற்றுக்கு ஆளாயினர்.
இருப்பினும், இதுவரை இங்கு பரவிய அத்தனை குரங்கம்மைத் தொற்றுகளும் கடுமை குறைந்த இரண்டாம் நிலைத் தொற்றுகள்.
‘எம்பாக்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் குரங்கம்மை, சளிக்காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுடன் சீழ் நிறைந்த புண்களால் உணரப்படும்.
அந்தத் தொற்றின் புதிய வகையான ‘கிளேட் 1’ திரிபு உலக சுகாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. காரணம், நெருங்கிய தொடர்பில் உள்ளோரிடம் எளிதில் பரவும் தன்மை கொண்டது அந்த புதிய வகைக் கிருமி.
ஆப்பிரிக்காவிலும் பிற பகுதிகளிலும் பரவும் குரங்கம்மை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று ஆகஸ்ட் 17ஆம் தேதி திரு ஓங் குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கிருமி சிங்கப்பூருக்கும் வரக்கூடும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
பாதிக்கப்பட்ட கண்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானச் சேவை இல்லை என்பதால் தற்போதைய நிலவரப்படி அபாயம் குறைந்து காணப்படுவதாக அவர் சொன்னார்.
உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மையை உலக சுகாதார நெருக்கடியாக ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவித்தது. ஈராண்டுகளில் அந்நிறுவனம் அவ்வாறு அறிவித்திருப்பது இது இரண்டாம் முறை.