தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேரியா பரவல் அபாயத்தைத் தடுக்க கண்காணிக்கப்படும் குரங்குகள்

2 mins read
3c147b88-062a-40c8-9253-cd4ef087edd1
மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி வகை நீண்ட வால் குரங்குகளில் இயற்கையாகவே இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலேரியா நோய் பரவல் அபாயத்தைத் தடுக்க சிங்கப்பூரின் வனப்பகுதிகளில் உள்ள குரங்குகள் கண்காணிக்கப்படும்.

குரங்குகள் எழுப்பும் ஒலியைப் பதிவு செய்ய தீவெங்கும் உள்ள வனப்பகுதிகளில் 12க்கும் அதிகமான ஒலிப்பதிவு கருவிகள் வைக்கப்படும்.

அவற்றின் மூலம் சிங்கப்பூரில் அதிக அளவில் உள்ள நீண்ட வால் குரங்குகள் கண்காணிக்கப்படும்.

கண்காணிப்புப் பணியில் என்யுஎஸ் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஈடுபடும். இக்குழுவுக்கு இணைப் பேராசிரியர் கிம்பர்லி ஃபொர்னஸ் தலைமைதாங்குகிறார்.

ஒட்டுண்ணியால் குரங்குகள் மூலம் மனிதர்களுக்கு நோய்கள் பரவலாம்.

பாதிப்படைந்த குரங்குகள் அதிக அளவில் உள்ள இடங்களை அடையாளம் காண்பதே ஆய்வுக் குழுவின் இலக்கு.

மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி வகை நீண்ட வால் குரங்குகளில் இயற்கையாகவே இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரங்குகள் இருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்ப்பதைவிட ஒலிப்பதிவுக் கருவிகள் மூலம் அவற்றைக் கண்காணிக்கலாம்.

ஒலிப்பதிவுக் கருவிகள் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு மனிதர்கள், கொசுக்கள் அதிகமுள்ள இடஙகளிலிருந்து பெறப்படும் தரவுகளை ஒப்பிடலாம்.

புலாவ் உபின் தீவிலும் மண்டாயில் உள்ள நைட் சஃபாரியிலும் முன்னோட்ட ஆய்வு நடத்தப்படுகிறது. இத்திட்டம் செம்டம்பர் மாதம் சிங்கப்பூரெங்கும் விரிவுபடுத்தப்படும்.

தேசிய பூங்காக்கள் கழகம் ஒப்புதல் அளித்த பிறகு, ஒலிப்பதிவுக் கருவிகள் தீவெங்கும் 25 இடங்களில் வைக்கப்படும். ஒவ்வொரு ஒலிப்பதிவுக் கருவியின் விலை $120.

பசுமை ரயில் பாதை, வடக்குப் பூங்கா இணைப்பு வட்டப் பாதை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒட்டுண்ணியால் பாதிப்படைந்துள்ள குரங்குகளின் ரத்தத்தைக் கொசுக்கள் உறிஞ்சி, பிறகு மனிதர்களைக் கடிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு மலேரியா நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

மலேசியாவில் இத்தகைய மலேரியா நோய் பரவல் அதிக அளவில் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மலேரியாவால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், தலைவலி, தசை வலி, சோர்வு ஆகியவை ஏற்படும் என்றும் சுகாதார அமைச்சின் ஹெல்த்ஹப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேரியா பாதிப்பு இல்லாத நாடுகள் என்று 1982ல் சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டது. அப்படி என்றால் அதற்கு முன்பு, தொடர்ச்சியாகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மலேரியாவால் சிங்கப்பூரில் யாரும் நோய்வாய்ப்படவில்லை என்று பொருள்படும்.

இருப்பினும், போக்குவரத்து மையமாகத் திகழும் சிங்கப்பூரில் நோய் பரவல் ஏற்படாமல் இருக்க சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம்.

குறிப்புச் சொற்கள்