சிங்கப்பூரில் 2025ல் மூன்றாவது முறையாக பருவமழை தீவிரம்; தீவு முழுவதும் மழை

2 mins read
be2fb9e0-e752-4914-b6cf-de965629120e
ராபர்ட்சன் கீயில் புதன்கிழமை (மார்ச் 19) பெய்யும் மழை. - படம்: சாவ் பாவ்
multi-img1 of 3

சிங்கப்பூரில் இவ்வாண்டு மூன்றாவது முறையாக பருவமழை தீவிரமடைந்துள்ளதால், புதன்கிழமை (மார்ச் 19) தீவு முழுவதும் மழை பெய்தது. நண்பகல்வாக்கில் வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.

காலை 9.15 மணியளவில் தீவின் கிழக்குப் பகுதியை மழை மேகங்கள் சூழ்ந்தன. ஒரு மணி நேரம் கழித்து, சிங்கப்பூர் முழுவதும் மழை பெய்தது.

காலை 10.20 மணிக்கு தீவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்தது. ஆனால், திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அந்த நேரத்தில் தகவல் வெளிவரவில்லை.

புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வரை பருவமழை தீவிரமடையும் என தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னுரைத்திருந்தது. மிதமான மழையோ கனமழையோ பெய்யும்போது வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம்.

இவ்வாண்டு மூன்றாவது முறையாக பருவநிலை தீவிரமடைந்திருப்பது வழக்கத்துக்கு மாறானதே. பொதுவாக, டிசம்பருக்கும் ஜனவரிக்கும் இடையே நிலவும் வடகிழக்குப் பருவமழைக்காலத்தின் ஆரம்பகட்டத்தில்தான் பருவநிலை தீவிரமடையும்.

சிங்கப்பூர் தற்போது பருவமழைக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பொதுவாக மார்ச் வரை பருவமழைக்காலம் நீடிக்கும்.

சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக நான்கு முறை வரை பருவமழை தீவிரமடைகிறது. ஒவ்வொரு பருவமழை நிகழ்வும் ஒன்றுக்கும் ஐந்து நாள்களுக்கும் இடைப்பட்டிருக்கும்.

ஆனால், பருவமழை பல நாள்களுக்கு நீடிக்கவும் செய்யலாம். ஜனவரி 10 முதல் 13 வரை இந்த நிலை ஏற்பட்டது. ஜனவரி 10, 11 இரு தேதிகளில் மட்டும் பெய்த மழை, பொதுவாக ஜனவரி முழுவதும் பெய்யும் மழைப்பொழிவை விஞ்சியது.

அவ்விரு தினங்களில், சாங்கியில் ஆக அதிகமாக 255.2 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவானது. இது, ஜனவரி முழுவதுக்கும் சராசரியாகப் பதிவாகும் 222.4 மில்லிமீட்டர் மழைப்பொழிவை விஞ்சியது.

இதற்கிடையே, புதன்கிழமை பெய்த இடைவிடாத மழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்தது. மவுண்ட்பேட்டன் சாலை/ஜாலான் சீவியூ பகுதியில் பிற்பகல் 2.45 மணிக்கு கழகம் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.

புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பெய்யும் பருவமழையின்போது, வெளியே செல்லும்போது கையில் குடை வைத்துக்கொள்வதுடன் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளும்படி மக்களுக்கு கழகம் அறிவுறுத்தியது. வெள்ள அபாய எச்சரிக்கையைச் சரிபார்த்துக்கொள்வதோடு, அதற்கு ஏற்றாற்போல பயணப் பாதைகளுக்குத் திட்டமிடும்படியும் கழகம் அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்