ஆண்கள் மட்டுமே பயிலும் மொன்ட்ஃபர்ட் ஜூனியர் பள்ளி வரும் 2028ஆம் ஆண்டுமுதல் மாணவிகளையும் சேர்த்துக்கொள்ளவிருக்கிறது.
மாணவிகள் 2027ஆம் ஆண்டின் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்புக்கான பதிவு நடவடிக்கையின்போது, அதற்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த மார்ச் 4ஆம் தேதி ஹவ்காங்கில் உள்ள அந்தப் பள்ளியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில், பள்ளித் தலைமைத்துவம் பெற்றோருக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் இந்த மாற்றத்தைப் பற்றி தெரியப்படுத்தியது.
மொன்ட்ஃபர்ட் உயர்நிலைப் பள்ளி 2034ஆம் ஆண்டுக்குள் அல்லது அதற்கும் முன்னதாக, இருபாலர் பள்ளியாகச் செயல்படுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், செயின்ட் கேப்ரியல்ஸ் அறநிறுவனத்திடம் மொன்ட்ஃபர்ட் ஜூனியர் பள்ளிக்கான திட்டங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைச் செயல்படுத்துவதற்கான விவரங்கள் குறித்து கலந்துபேசுவதாகவும் கல்வி அமைச்சு கூறியது.
மொன்ட்ஃபர்ட் கல்வி நிலையங்கள் உட்பட ஆறு பள்ளிகளை அந்த அறநிறுவனம் மேற்பார்வையிடுகிறது.
இருபாலர் பள்ளியாக மாறும் திட்டங்கள் குறித்து கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளதை மொன்ட்ஃபர்ட் ஜூனியர் பள்ளி உறுதிப்படுத்தியது.
தயாரானதும், கூடுதல் விவரங்கள் கிடைக்கப்பெறும் என்று கல்வி அமைச்சும் அந்தப் பள்ளியும் தெரிவித்தன. இந்த மாற்றத்திற்கான காரணங்களையோ பள்ளியில் சேர்த்துக்கொள்ளவிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையையோ பற்றி அவை பதில் அளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
மொன்ட்ஃபர்ட் பள்ளிகள், சிங்கப்பூரில் இரு பாலினங்களையும் ஏற்கும் ஒற்றைப் பாலினப் பள்ளிகளின் பட்டியலில் சேர்ந்துகொள்கிறது.
இந்நிலையில், இருபாலர் பள்ளிச் சூழலில், பன்முகச் சமுதாயத்திற்குத் தேவையான உணர்வுசார்ந்த அறிவாற்றல், தொடர்புத் திறன்கள், பரஸ்பர மரியாதை ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக்கொள்வார்கள் என்று மொன்ட்ஃபர்ட் உயர்நிலைப் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் மார்க் டே கூறினார்.
மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களுக்கு அப்பால் பார்த்துக் கற்றுக்கொள்ள புதிய மாற்றம் வகைசெய்யும் என்றார் அவர்.


