சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மைக்காக சிங்கப்பூரில் ஒருமாதகால இயக்கம்

சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மைக்காக சிங்கப்பூரில் ஒருமாதகால இயக்கம்

2 mins read
d528f572-ecce-4bad-8ae7-6a2cee9fae6e
ஜூன் 30ஆம் தேதி மீ டோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ‘டிபிஎஸ் சஸ்டெயினபிலிட்டி ஸ்பார்க்ஸ்’ முகப்பில் நீர்ப் பாதுகாப்பு குறித்துக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுற்றுப்புறத்தின் நீடித்த நிலைத்தன்மையைக் கட்டிக்காக்கவும் பருவநிலை மீள்திறனை மேம்படுத்தவும் சிங்கப்பூரர்கள், அமைப்புகள், சமூகம் அனைத்தும் கூட்டு முயற்சி எடுக்க ஊக்குவிக்கும் ஒருமாதகால தேசிய இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

“பசுமையாகும் சிங்கப்பூர்” (Go Green SG) இயக்கத்தைத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பொங்கோலில் உள்ள மீ டோ பள்ளியில் தொடங்கி வைத்தார்.

ஜூலை மாதம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட பங்காளிகளின் ஏற்பாட்டில் 300க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் நடைபெறும்.

இந்த இயக்கம் சென்ற ஆண்டு பருவநிலை செயல்திட்ட வாரம் என்றழைக்கப்பட்டபோது நடைபெற்றதைவிட இருமடங்கு அதிகமான நடவடிக்கைகள் இவ்வாண்டு நடைபெறவுள்ளன.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு ஏற்பாடு செய்யும் இந்த இயக்கத்தின் பங்காளிகளில் டிபிஎஸ், சிட்டி டெவலப்மண்ட் லிமிடெட், மண்டாய் வனவாழ்வினக் குழுமம், சிங்கப்பூர் பயணத்துறை கழகம் உள்ளடங்கும்.

நீடித்த நிலைத்தன்மைக்கான நடவடிக்கைகளில் அமைச்சுடன் சிங்கப்பூர் பயணத்துறை கழகம் கூட்டிணைந்து செயல்படுவது இதுவே முதல்முறை. இருவழித்தொடர்புச் சுற்றுலாக்கள், அறிவூட்டும் பயிலரங்குகள், பசுமையான சில்லறை விற்பனை, உணவருந்தும் அனுபவம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கழகம் பங்கேற்கிறது.

சிங்கப்பூரில் ஏற்கெனவே வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பருவநிலை சவாலுக்கு சிங்கப்பூரால் தனியாகத் தீர்வுகாண முடியாது என்றார் திரு வோங்.

பல்வேறு அனைத்துலகத் தளங்களில், ஒருமித்த கருத்துள்ள நாடுகளுடன் சிங்கப்பூர் அணுக்கமாகச் செயல்படுகிறது. அதே வேளையில், சிங்கப்பூரில் வெப்பத்தை உண்டாக்கும் கரியமிலவாயு வெளியாக்கத்தைக் குறைக்கிறது.

“மேலும் பசுமையான சிங்கப்பூரின் உருவாக்கம் எனக்கும் என் அணியினருக்கும் முக்கிய முன்னுரிமையாக நீடிக்கிறது. எங்கள் கொள்கைகளை விரிவாக மறுஆய்வு செய்து, நமது சமூக இணக்கத்தைப் புதுப்பிக்க முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தை நாங்கள் மேற்கொள்வது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்,” என்று நிதி அமைச்சருமான திரு வோங் கூறினார்.

அவர் 2022 ஜூன் மாதம் தொடங்கி வைத்த முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தின்கீழ், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மைக்காகவும் பசுமை காக்கும் பொருளியலுக்கு மாறுவதற்காகவும் என்னென்ன சவால்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதன் தொடர்பில் சிங்கப்பூரர்களுடன் உரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. வட்டச்சூழல், உணவு மீள்திறன், கடல்மட்ட மீள்திறன், வெள்ளத் தடுப்பு, கரியமிலவாயுவற்ற நிலையை அடையும் இலக்கு போன்ற பல்வேறு தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.

கலந்துரையாடல் தொடரின் ஆறு அடிப்படைத் தூண்களில் ஒன்றான பொறுப்பாண்மை தூணின்கீழ் கிட்டத்தட்ட 30 அங்கங்களில் 2,200க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பங்கெடுத்துள்ளனர். தொழில்நிறுவனங்கள், அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள், பள்ளிகள், சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இதில் உள்ளடங்கினர்.

குறிப்புச் சொற்கள்
நீடித்த நிலைத்தன்மைதுணைப் பிரதமர்டிபிஎஸ்