சிங்கப்பூர் காவல்துறையும் டிபிஎஸ் வங்கியும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை, 3,900க்கும் மேற்பட்டோரை மோசடிக்காரர்களின் வலையில் விழாமல் காப்பாற்றியுள்ளது. இதன்மூலம் ஏறக்குறைய $21 மில்லியன் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தது.
சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி தடுப்பு நிலைய அதிகாரிகளும் டிபிஎஸ் வங்கியும் இணைந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின்போது 4,600க்கும் மேற்பட்ட விழிப்பூட்டும் குறுஞ்செய்திகளை 3,900க்கும் மேற்பட்டோர்க்கு அவர்கள் அனுப்பினர்.
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் குறுகிய காலத்தில் அதிகமானோருக்கு குறுஞ்செய்தி விழிப்பூட்டல்கள் அனுப்புவதற்கும் வேலை, முதலீடு தொடர்பான மோசடிகளால் பாதிக்கப்படுவோரைக் கண்டறிவதற்கும் தானியங்கி தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தினர்.
காவல்துறையின் குறுஞ்செய்திகள் கிடைக்கும்வரை பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் மோசடிக்கு இரையானது குறித்து அறிந்திருக்கவில்லை.
வேலை தொடர்பான மோசடிகளில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை ‘வாட்ஸ்அப்’ அல்லது ‘டெலிகிராம்’ வாயிலாகப் பெறுவார்கள்.
மோசடிக்காரர்கள் அவர்களை எளிய கருத்துக்கணிப்புகளில் பங்கேற்கும்படி வலியுறுத்துவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் மோசடி இணையத்தளங்களுக்குச் சென்று கணக்குகளை உருவாக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்வார்கள்.
முதலீடு தொடர்பான மோசடிகளில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலம் அணுகப்படுவார்கள்.
மோசடிக்காரர்கள் தங்களை நிதி ஆலோசகர்களாகவும் தரகர்களாகவும் முதலீட்டு வல்லுநர்களாகவும் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து, அதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து மக்களைத் தங்கள் வலையில் விழச்செய்வார்கள்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, ‘ஸ்கேம் ஷீல்டு’ போன்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்படி காவல்துறை அறிவுறுத்தியது.
மேலும் தனிப்பட்ட கணக்குகளுக்கான இரு அம்ச அங்கீகாரம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அமைக்குமாறு பொதுமக்களுக்கு அது நினைவூட்டியது.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இணையப் பரிவர்த்தனை வரம்புகளை அமைக்க வேண்டும். இதன் மூலம் மோசடி செய்பவர்கள் திருடக்கூடிய பணத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று காவல்துறை தெரிவித்தது.
மோசடிகள் குறித்து மேல்விவரம் அறிய www.scamalert.sg என்ற இணையத்தளத்தையோ 1800-722-6688 என்ற 24 மணி நேரத் தொலைபேசி எண்ணில் ஊழல் தடுப்பு நிலையத்தையோ தொடர்புகொள்ளலாம்.