சிங்கப்பூரில் 21 முதல் 59 வயதுக்குட்பட்ட 1.15 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் - அதாவது, தகுதியுள்ள 1.9 மில்லியன் பேரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் - அவர்களுக்குரிய $600 எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த வயதுப் பிரிவினருக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியான ஒரு நாளில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.
வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் புதன்கிழமை (ஜூலை 23) இரவு 7 மணிக்குப் பிறகு தமது ஃபேஸ்புக் பதிவில் இந்தத் தகவலைப் பகிர்ந்தார்.
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுத் திட்டம் மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கியதிலிருந்து 21 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய மொத்தம் 2.08 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் தங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 928,000க்கும் அதிகமான மூத்த சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
ஏறக்குறைய 1.1 மில்லியன் மூத்த குடிமக்களில் 84 விழுக்காட்டினர் ஜூலை 1 முதல் தங்கள் $800 எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
go.gov.sg/sg60v என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய இந்தப் பற்றுச்சீட்டுகள் டிசம்பர் 31, 2026 வரை செல்லுபடியாகும்.
குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிடிசி பற்றுச்சீட்டுகளைப் போலன்றி, சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தைக் கொண்டாட ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் இந்தப் பற்றுச்சீட்டுகள் தனிநபர்களுக்கானவை.
தொடர்புடைய செய்திகள்
சிடிசி பற்றுச்சீட்டுகளை ஏற்கும் அனைத்து வணிகங்களிலும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். இதில், 23,000க்கும் அதிகமான உணவங்காடிக் கடைகள், அக்கம்பக்க வணிகங்கள், தீவு முழுவதும் 400 கிளைகளைக் கொண்ட எட்டு பேரங்காடிகளும் அடங்கும். இத்திட்டத்தில் பங்கேற்கும் கடைகளின் பட்டியலை go.gov.sg/sg60voucher இணையத்தளத்தில் காணலாம்.
இதுவரை $160 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக திருவாட்டி லோ தெரிவித்தார். இதில், பங்கேற்கும் உணவங்காடிக் கடைகள், அக்கம்பக்க வணிகங்களில் $95.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
பங்கேற்கும் பேரங்காடிகளில் $64.5 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
மொத்தமாக, ஏறக்குறைய மூன்று மில்லியன் பெரியவர்கள் இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பெறுவார்கள்.
இதற்கான மொத்த செலவு அரசாங்கத்திற்கு $2.02 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.