ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில், 100க்கும் மேற்பட்ட அருகிவரும் ‘ஹாக்ஸ்பில்’ ஆமைக்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) காலை அதன் கூட்டிலிருந்து வெளியே வந்தன.
கடற்கரையில் சில இடையூறுகளை எதிர்கொண்டபோதிலும் அவை பாதுகாப்பாக கடலுக்குள் சென்றன.
முற்றிலும் அழிந்துபோகக்கூடிய அபாயத்தை மிக அதிகமாக எதிர்கொள்ளும் இந்த ஆமை இனம், தேசிய பூங்காக் கழக அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் அவற்றின் வாழ்வியலுக்கான முதல் படியை எடுத்துவைத்ததாக டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட்ட தனது ஃபேஸ்புக் பதிவில் கழகம் கூறியது.
சிங்கப்பூர் நீரில் காணப்படும் இரண்டு வகை கடல்சார் ஆமைகளில் ஒன்று ‘ஹாக்ஸ்பில்’ ஆமை. மற்றொன்று பச்சை ஆமை.
ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகள் முட்டையிடுவதற்காக சிங்கப்பூர் கரைகளுக்குத் திரும்பும் எனக் கழகம் தெரிவித்தது.
பொதுவாக, இந்த வகை ஆமைகள் அதன் முட்டை கூட்டிலிருந்து வெளிவர கிட்டத்தட்ட 60 நாள்கள் தேவைப்படும்.
ஆமைக்குஞ்சுகள் கூட்டிலிருந்து வெளியேறி கடலுக்குள் சென்றவரை அவற்றை உன்னிப்பாக பூங்காக் கழக அதிகாரிகள் கண்காணித்தனர். மேலும், அவற்றின் சுகாதார நிலையைத் தெரிந்துகொள்ள அவர்கள் அவற்றை அளவெடுத்துக்கொண்டனர்.