சம்பளப் பாக்கியைப் பெற்றுத்தரக் கோரி, இந்தியா, பங்ளாதேஷைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 22) திரண்டனர்.
அவர்கள் பணிபுரிந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அங்கு பணியாற்றியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாகூர் லேனில் இயங்கி வந்த, குளிர்சாதனப் பெட்டி பராமரிப்புச் சேவைகளை வழங்கும் கேபிஏ இன்ஜினியரிங் நிறுவனத்தில் தாங்கள் பணிபுரிந்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
“பல ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர்களிடம் கேட்டபோது நிறுவனம் மூடப்பட்டுவிட்டதாகத் தகவல் கிடைத்தது,” என்று அந்த நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய நாட்டவரான சம்பத் கூறினார்.
தங்களுக்கு வேறு வழி தெரியாததால் மனிதவள அமைச்சை நாடியதாக அவர் கவலையுடன் தெரிவித்தார்.
காலை 9 மணியளவில் பெண்டமியர் சாலையில் உள்ள மனிதவள அமைச்சின் சேவை மையத்திற்கு ஊழியர்கள் சென்றனர்.
அமைச்சின் அதிகாரிகள், அங்கிருந்தவர்கள் கேபிஏ இன்ஜினியரிங் நிறுவன ஊழியர்கள் என்பதை உறுதி செய்த பின்னர், விசாரணைக்காகப் பாதுகாப்புடன் அலுவலகக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
ஏறத்தாழ 100 ஊழியர்கள் உள்ளே சென்றதை ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்களின் புகார் குறித்து விசாரித்து வருவதாக மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கேபிஏ இன்ஜினியரிங், எஸ்கே இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அது கூறியது.
அவர்களுக்கு உதவ, அமைச்சும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியும் இணைந்து முதலாளிகளைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன.
மின்சாரம், குளிர்சாதனப் பெட்டி சார்ந்த பணிகளுக்காக இந்திய முகவர் ஒருவரால் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
நான்கு நாள்களுக்கு முன்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்றபோது அது பூட்டப்பட்டிருந்ததாகவும், தங்களை வேலைக்குச் சேர்த்த முகவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவருக்கு 1,400 வெள்ளியும், மற்றொருவருக்கு 4,000 வெள்ளியும் சம்பளப் பாக்கி உள்ளது.
தமது சம்பள நிலைமை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அந்நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் இராஜேந்திரன் பெர்தாப், 36, கூறினார்.
நிறுவனத்தின் முகவரிக்குச் சென்றபோது, அங்கு 2025 செப்டம்பர் முதல் வேறு ஒரு கட்டுமான நிறுவனம் இயங்கி வருவது தெரியவந்ததாக ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
வணிகப் பதிவுகளின்படி,கேபிஏ இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு இரண்டு இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர். அவர் பொறியியல், குழாய் வேலைகள் சார்ந்த மேலும் பல நிறுவனங்களின் இயக்குநராகவும் உள்ளார்.
ஊழியர்களுக்குத் தகுந்த தங்குமிடமும் உணவும் கிடைப்பதை உறுதி செய்யப் வெளிநாட்டு ஊழியர் நிலையத்துடன் (MWC) இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் வரை, ஊழியர்கள் விரும்பினால் புதிய வேலை தேடிக்கொள்ளவும், முதலாளிகளை மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் இரு நிறுவனங்கள் மீது தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சு கூறியது.


