அமெரிக்க அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 100க்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களை நாடுகடத்த உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அவர்களையும் சேர்த்து வெளிநாட்டினர் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோரை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் அமெரிக்கக் குடிநுழைவு, சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) தடுப்புக்காவலில் வைக்கப்படாதோர் பதிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதாவது ‘ஐசிஇ’ பிரிவு அவர்களைத் தடுத்து வைக்காவிட்டாலும் சட்டத்தை மீறியதற்காக வேறு அமைப்புகள் அவர்களைத் தடுத்துவைத்திருக்கக்கூடும்.
‘ஐசிஇ’ பிரிவின் பட்டியலில் மொத்தம் ஏழு மில்லியன் பேர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்காவிற்கு அகதிகளாக வந்து, குடிநுழைவு நடைமுறைகள் முடிவடையக் காத்திருக்கும் வெளிநாட்டினரும் இவர்களில் அடங்குவர்.
குற்றவாளிகளான அமெரிக்க நிரந்தரவாசிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இவர்கள் சுதந்திரமாக நடமாடினாலும் வழக்கமான இடைவெளியில் அதிகாரிகளை நேரில் சென்று பார்க்கவேண்டும் அல்லது கணுக்காலில் கண்காணிப்புக் கருவியைப் பொருத்தியிருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்பவர்கள்.
இந்த ஏழு மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினருக்கு நாடுகடத்துவது தொடர்பான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் உத்தரவைப் பெற்ற 90 நாள்களுக்குள் நாடுகடத்தப்படுவர்.
இதற்கிடையே, 2024ஆம் நிதியாண்டில் சிங்கப்பூரர்கள் மூவர் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்கும் இடையில் நாடுகடத்தப்பட்டனர்.
அவர்களையும் சேர்த்து, 2019ஆம் நிதியாண்டுக்கும் 2024ஆம் நிதியாண்டுக்கும் இடையில் சிங்கப்பூரர்கள் மொத்தம் 22 பேர் நாடுகடத்தப்பட்டனர்.

