வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஏறக்குறைய 13,480 வீடுகளில் சில, தங்கள் குறைந்தபட்ச குடியிருப்புக் காலகட்டத்தை (எம்ஓபி) 2026ல் எட்டவுள்ளன. அத்தகைய வீடுகளில் பெரும்பாலானவை பொங்கோல், குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ் ஆகியவற்றில் உள்ளன.
2025ல் ஐந்தாண்டு எம்ஓபியை எட்டியுள்ள 6,970 வீடுகளைக் காட்டிலும் அடுத்த ஆண்டுக்கான எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு மடங்காக உள்ளது. இது, வீடுகளுக்கான தேவையைக் கையாண்டு மறுவிற்பனை விலையை ஓரளவு மிதமாக்கும் என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வீடுகள், 14 நகரங்களிலுள்ள 22 குடியிருப்புத் திட்டங்களுக்கிடையே அமைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
ஆய்வாளர்களின் தரவுகளின்படி, பொங்கோல் வட்டாரத்தில் ஆக அதிகமாக, ஐந்து குடியிருப்புத் திட்டங்களுக்குள்ளே மொத்தம் 3,222 எம்ஓபி வீடுகள் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பகுதி பொங்கோல் நாரத்ஷோர் குடியிருப்பில் உள்ளன. இதற்கு அடுத்து, குவீன்ஸ்டவுன் வட்டாரத்திலுள்ள டோசனில் 2,405 எம்ஓபி வீடுகள் இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தெம்பனீசில், 2,133 எம்ஓபி வீடுகளின் பெரும்பகுதி தெம்பனிஸ் நார்த்தில் அமைந்துள்ளது. தோ பாயோவின் புதிய பிடாடாரி குடியிருப்பில் 1,594 எம்ஓபி வீடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோசன், பிடாடாரி ஆகிய இடங்களிலுள்ள மறுவிற்பனை வீடுகள், மில்லியன் டாலர் விற்பனைகளில் அடிக்கடி அங்கம் வகிக்கின்றன. டோசன் வட்டாரத்தில் உள்ளவை, ஆக அதிக விலையில் இதுவரையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
2026ல் எம்ஓபியை எட்டவுள்ள வீடுகளில் 5,909 வீடுகள் நான்கறை கொண்டவை. 2,711 ஐந்தறை வீடுகள். மற்ற 2,299 வீடுகளும் 2,561 வீடுகளும் முறையே ஈரறையும் மூவறையும் கொண்டவை.
தொடர்புடைய செய்திகள்
இந்த வீடுகளுடன், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வரும் தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் விற்பனையும் எஞ்சியுள்ள வீடுகளின் விற்பனையும் வீடுகளுக்கான தேவையை நிறைவுசெய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜூன் மாதத்தில் ‘ஸ்கைடெர்ரஸ் அட் டோசன்’ வட்டாரத்தில் 1,313 சதுர அடி வீடு, 1. 659 மில்லியன் வெள்ளிக்குக் கைமாறியது. இது, ஆக அதிக விலையில் விற்கப்பட்ட வீவக வளர்ச்சிக் கழக வீடாகும்.
ஒட்டுமொத்தமாக, 53,000க்கும் அதிகமான வீடுகள் 2026க்கும் 2028க்கும் இடையே எம்ஓபியை எட்டவுள்ளன. இந்த எண்ணிக்கை, 2023க்கும் 2025க்கும் இடையே எம்ஓபியை எட்டும் கிட்டத்தட்ட 34,000 வீடுகள் என்ற எண்ணிக்கையை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

